சட்டீஸ்கரில் நக்சல்களுடன் பாஜக கைகோர்த்துள்ளது.. முதல்வர் பூபேஷ் பாகல் பகீர் குற்றசாட்டு

தினகரன்  தினகரன்
சட்டீஸ்கரில் நக்சல்களுடன் பாஜக கைகோர்த்துள்ளது.. முதல்வர் பூபேஷ் பாகல் பகீர் குற்றசாட்டு

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் பா.ஜ.க. கை கோர்த்துள்ளது என்று சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் கூறியுள்ளார். ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டிக்கு அளித்துள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் தான்டேவடா பகுதியில் நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஷியாமா கிரி மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த பீமா மாண்டவியின் வாகனத்தை மாவோயிஸ்டுகள் வெடிகுண்டை வெடிக்க செய்தும் துப்பாக்கியால் சுட்டும் பீமா மாண்டவி உட்பட 5 பேரை கொன்றனர். மக்களவைக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவிருந்த நிலையில் நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக பாஜக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்த பூபேஷ் பாகல் சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் பாஜக கைகோர்த்துள்ளது. இதற்கு மிகப்பெரிய ஆதாரமாக 2013-ல் காங்கிரஸ் தலைவர் ஜிராம் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்டதைக் கூறியவர், 2003-ல் 4 பகுதிகளில் மட்டுமே நக்சலிசம் இருந்தது. இப்போது 14 மாவட்டங்களில் பரவியுள்ளது. முன்னாள் முதல்வர் ரமன்சிங் பிறந்த மாவட்டமான கவர்தாவுக்கும் நக்சலிசம் பரவியுள்ளது என்று கூறியுள்ளார். பயங்கரவாதமும், நக்சலிசமும் பாஜக ஆட்சியில்தான் அதிகரித்தது என்பது புள்ளிவிவரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டவை உரி, பதான்கோட், மற்றும் புல்வாமா ஆகிய தாக்குதல்கள் அனைத்தும் பாஜக ஆட்சியில்தான் நடந்துள்ளது. துப்பாக்கிகள் மூலமாக மட்டுமே நக்சல்களை ஒழிக்க முடியாது கடந்த 3 மாதங்களில் நமது படைகள் 17 மாவோயிஸ்ட்களை கொன்றுள்ளனர். இருப்பினும் நக்சலிசத்தை அழிக்க அதிகப்படியான முயற்சி தேவை. துப்பாக்கி மட்டுமே இதற்கு தீர்வாகாது. அவர்களும் சுடுவார்கள், நம் தரப்பிலிருந்தும் சுடுவோம். இந்த அணுகுமுறை உதவாது. இதனை முடிவுக்குக் கொண்டு வர மக்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டியது கட்டாயம். அப்போதுதான் மாவோயிஸ்ட்களை ஒழிக்க முடியும். இவ்வாறு பூபேஷ் பாகல் கூறியுள்ளார்.

மூலக்கதை