மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய சாத்வி பிரக்யா தேர்தலில் போட்டியிட தடை?

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய சாத்வி பிரக்யா தேர்தலில் போட்டியிட தடை?

கடந்த 2008ம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலம், மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர்.

குண்டு வெடிப்பு வழக்கில் வழக்கில் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் சுமார் 7 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷியாம் சாஹூ, ஷிவ்நாராயண் கல்சங்ரா மற்றும் பிரவீன் தகல்கி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், சாத்வி பிரக்யா, ஸ்ரீகாந்த் புரோஹித், சுதாகர் திவேதி, ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யா, சமீர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி, அஜய் ரஹிர்கர் ஆகியோருக்கு எதிராக தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மேலும் இருவரான ஜகதிஷ் மாத்ரே, ராகேஷ் டாவ்டே ஆகியோர் மீது ஆயுத தடை சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் தற்போது முறைப்படி பாஜவில் இணைந்துள்ளார்.

குண்டு வெடிப்பு வழக்கில் 9 ஆண்டுகள் சிறையில் இருந்த இவர், கடந்த 2017ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். மத்திய பிரதேச மாநிலம், பிந்த் மாவட்டத்தில் லஹர் என்ற இடத்தில் பிறந்த இவர், வரலாறு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.

படிக்கும்போதே ஆஸ்எஸ்எஸ் உடன் தொடர்புள்ள மாணவர்கள் அமைப்பான ஏபிவிபி மற்றும் பெண்கள் அமைப்பான துர்கா வாஹிணி ஆகிய அமைப்புகளில் பணியாற்றினார். தற்போது பாஜவில் இணைந்துள்ளதால், மத்திய பிரதேசத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் போட்டியிடும் போபால் தொகுதியில், இவரை எதிர்த்து களம் இறக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1971 முதல் 1984ம் ஆண்டு வரை சங்கர் தயாள் சர்மா போபாலின் எம்பியாக இருந்தார். அதன்பிறகு 1989ம் ஆண்டு முதல் அந்தத் தொகுதி பாஜ வசம் இருந்து வருகிறது.

கடந்த 1991ல் முன்னாள் கிரிக்கெட் வீரரான மன்சூல் அலிகான் பட்டோடி காங்கிரஸ் சார்பில் இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

தற்போது போபால் எம்பியாக பாஜவின் அலோக் சஞ்சார் உள்ளார்.
இந்நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திலும், என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்திலும் நிசார் சயீது என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இவர், மாலேகான் குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஒருவரின் தந்தை.

அவர் தாக்கல் செய்த மனுவில், ‘சாத்வி பிரக்யா சிங் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு உடல் தகுதியுடன் இருந்தால், அவர் நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தியது தெளிவாகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. எஸ். படல்கர், இது தொடர்பாக பதிலளிக்குமாறு என ஐஎன்ஏ அமைப்புக்கும், சாத்வி பிரக்யா சிங்குக்கும் உத்தரவிட்டார்.

அடுத்த விசாரணை வரும் திங்கள்கிழமை (ஏப். 22) நடைபெறவுள்ளது.

இதற்கிடையே, வரும் 23ம் தேதி போபால் மக்களவை தொகுதியில், பாஜ சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

இந்துத்துவம், தேசியவாதம் பேசும் இவர், தனது கொள்கை பாஜவுடன் ஒத்துபோவதால், அந்தக் கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். வரும் 22ம் தேதி நீதிமன்றத்தில் சாத்வி போட்டியிட தடை கோரி மனு தொடர்பாக விசாரணை, அடுத்த நாள் 23ம் தேதி அவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளதால் மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போபால் தொகுதிக்கு மே மாதம் 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

.

மூலக்கதை