புதியதோர் உலகம் செய்வோம் இன்று புனித வெள்ளி

தினமலர்  தினமலர்
புதியதோர் உலகம் செய்வோம் இன்று புனித வெள்ளி

இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' எனப்படுகிறது.

அவர் இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த
நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்கின்றனர். இயேசு இறந்த நாளுக்கு முன்புள்ள
40 நாட்கள் 'தவக்காலம்' எனப்படும். இதில் சுகபோகத்தை வெறுத்து உபவாசம் மேற்கொள்கின்றனர். ஆடம்பரம், அலங்காரத்தை தவிர்த்து, அர்ப்பணம் மிக்க வாழ்வு நடத்துவர். மங்கல நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. இதில் மிச்சப்படும் பணத்தில் ஏழைகளுக்கு உதவி செய்வர்.

இயேசு பிறப்பதற்கு முன்பிருந்த காலம் பழைய ஏற்பாட்டு காலம் என்றும், பின்புள்ள காலம் புதிய ஏற்பாட்டு காலம் எனப்படும். பழைய ஏற்பாட்டு காலத்தில் யூதர்களிடையே ஒரு பழக்கம் இருந்தது. பாவம் செய்த மனிதன் பரிகாரம் தேடி ஒரு ஆட்டுக்குட்டியை தேர்ந்தெடுப்பான். அந்த ஆட்டை பலிபீடத்திற்கு எடுத்து வந்து, அதன் மீது கைகளை வைத்து தனது பாவங்களை
அறிக்கையிடுவான். ஆசாரியன் அந்த ஆட்டை பலிபீடத்தின் மீது கிடத்தி பலி கொடுப்பான்.
அதன் ரத்தத்தை பாவம் அறிக்கையிட்ட மனிதன் மீது தெளித்து ' இந்த ஆடு மரித்ததன் மூலம் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' எனக் கூறுவான். அந்த வகையில் இயேசு கிறிஸ்து உலக மக்களின் பாவத்தினை ஏற்று சிலுவையில் பலியானதால், 'இயேசு உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி' என பைபிளில் கூறப்பட்டுள்ளது.

இயேசு மக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். நோய்களைத் தீர்த்தும், உயிர் கொடுத்தும் நன்மை செய்தார். அவரது வழிகாட்டுதலை மக்கள் பின்பற்றினால், தங்களின் பிழைப்பிற்கு கேடு வரும் என சமயத்தலைவர்கள் அஞ்சினர். எனவே மதவிரோதமாக செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தினர். மக்களை தங்களின் வழிக்கு கொண்டுவர இயேசுவை கொல்லும் முடிவுக்கு வந்தனர்.

பலி ஆடாக இயேசு பாவங்களை தன் மீது ஏற்று, தனது ஜீவநாடகத்தை முடித்ததன் மூலம் மக்கள் அனைவரின் பாவங்களுக்கும் பரிகாரமானார். புனிதவெள்ளி நாளில் பாவம் இல்லாத புதிய உலகை உருவாக்க நாம் உறுதியேற்போம்.

மூலக்கதை