பந்துவீச்சாளர்கள் அசத்தலில் சன்ரைசர்ஸ் அபார வெற்றி

தினகரன்  தினகரன்
பந்துவீச்சாளர்கள் அசத்தலில் சன்ரைசர்ஸ் அபார வெற்றி

ஐதராபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்தது. முதுகுப்பிடிப்பு காரணமாக டோனி ஓய்வெடுக்க, சுரேஷ் ரெய்னா கேப்டன் பொறுப்பேற்றார்.சிஎஸ்கே தொடக்க வீரர்களாக வாட்சன், டு பிளெஸ்ஸி களமிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவரில் 79 ரன் சேர்த்தனர். வாட்சன் 31 ரன் (29 பந்து, 4 பவுண்டரி) எடுத்து நதீம் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். டு பிளெஸ்ஸி 45 ரன் (31 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஷங்கர் பந்துவீச்சில் பேர்ஸ்டோ வசம் பிடிபட்டார்.அடுத்து வந்த கேப்டன் ரெய்னா 13 ரன், கேதார் ஜாதவ் 1 ரன் எடுத்து ரஷித் கான் சுழலில் வெளியேறினர். சாம் பில்லிங்ஸ் டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, சென்னை அணி 14.4 ஓவரில் 101 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது. சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்தது. ஐதராபாத் பந்துவீச்சில் ரஷித் கான் 2, விஜய் ஷங்கர், ஷாபாஸ் நதீம், கலீல் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 133 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. அந்த அணி 16.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. அதிகபட்சமாக பேர்ஸ்டோ 61 ரன் (44 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். வார்னர் 50 ரன் எடுத்தார். சென்னை அணி பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் 2 விக்கெட் எடுத்தார். 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சன்ரைசர்ஸ் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

மூலக்கதை