தவிப்பு!சலுகை விலையில் பஸ் பாஸ் பெற பயணிகள்....வெயிலில் சில மணி நேரம் காத்திருப்பு

தினமலர்  தினமலர்
தவிப்பு!சலுகை விலையில் பஸ் பாஸ் பெற பயணிகள்....வெயிலில் சில மணி நேரம் காத்திருப்பு

மதுரை:மதுரை பழைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டில் சலுகை பஸ் பாஸ் பெற நேற்று பயணிகள் வெயிலில் பல மணி நேரம் காத்திருந்தனர். இருப்பினும் ஏராளமானோர் பாஸ் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கல்லுாரி மாணவர்கள், தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாத சலுகை பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. நகர் வடக்கு பகுதியினருக்கு பெரியார் பஸ் ஸ்டாண்ட், தெற்கு பகுதியினருக்கு புதுார் போக்குவரத்து பணிமனையில் மாதந்தோறும் 1 முதல் 15 ம் தேதி வரை சலுகை பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. மாணவர்கள் கல்லுாரி சான்று பெற்றும், அரசு, தனியார் ஊழியர்கள் துறை அதிகாரிகள் சான்று பெற்றும் விண்ணப்பத்துடன் போட்டோவை இணைத்து பாஸ் பெறலாம்.வழக்கமாக 15 நாட்கள் வரை பாஸ் வழங்கினாலும் இறுதி மூன்று நாட்களில் பயணிகள், மாணவர்கள் குவிகின்றனர். 'சர்வர்' பிரச்னையால் கம்ப்யூட்டர் முடங்கி விடுகிறது. இதனால் பாஸ் கேட்போர் மறுநாள் வரும்படி திருப்பி அனுப்பப் படுகின்றனர்.பாஸ் வழங்க நேற்று இறுதி நாள் என்பதால் மதுரை பழைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டில் வெயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. கம்ப்யூட்டர் சர்வர் பிரச்னையால் முடங்கியதால் பாஸ்களை வழங்க இயலவில்லை. சிலர் வெயில் கொடுமை தாங்க முடியாமல் திரும்பி சென்றனர். போக்குவரத்து கழக வர்த்தக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரியார் பஸ் ஸ்டாண்ட் அகற்றப்பட்ட பிறகு பாஸ் வழங்க இடம் இல்லை. எனவே பழைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டில் பாஸ் வழங்கப்படுகிறது. இதற்காக கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று கடைசி நாள் என்பதால் கூட்டம் அதிகம் இருந்தது. பயணிகள் நலன் கருதி இன்றும் (ஏப்.,16) பாஸ் வழங்கப்படும் என்றார்.

மூலக்கதை