மல்லையா, நீரவ் மோடி மட்டுமல்ல சமீபத்தில் 36 பேர் நாட்டிலிருந்து ‘எஸ்கேப்’

தினகரன்  தினகரன்
மல்லையா, நீரவ் மோடி மட்டுமல்ல சமீபத்தில் 36 பேர் நாட்டிலிருந்து ‘எஸ்கேப்’

புதுடெல்லி: விஜய் மல்லையா, நீரவ் மோடி மட்டுமல்லாமல் 36 பேர் கடன் மோசடி செய்துவிட்டு நாட்டில் இருந்து தப்பி வெளிநாடு சென்று விட்டதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது. இதில் இடைத்தரகராக செயல்பட்ட ராஜிவ் சக்சேனா கைது செய்யப்பட்டார். இவர் அரசு தரப்பு சாட்சியாக மாறுவதாக தெரிவித்தார். இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக டெல்லியை சேர்ந்த இடைத்தரகர் சுசன் மோகன் குப்தாவும் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சுசன் மோகன் குப்தா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குப்தாவிற்கு ஜாமீன் வழங்குவதற்கு அமலாக்கத்துறை சார்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் சிங் மற்றும் மட்டா ஆகியோர் வாதிடுகையில், “சுசன் மோகன் குப்தா சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியவர். மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி மற்றும் சன்டேசரா சகோதரர்கள்  உள்ளிட்டவர்களும்  சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியவர்கள்தான். ஆனால் இப்போது அவர்கள் நாட்டைவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதுபோன்று 36 தொழிலதிபர்கள் கடந்த சில ஆண்டுகளில் நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளனர்” என்றனர். அமலாக்கதுறை வழக்கறிஞர் சாம்வேத்னா வர்மா நீதிமன்றத்தில் கூறுகையில், “விசாரணை முக்கியமான கட்டத்தில் உள்ளது. சுசுன் டைரியில் இடம்பெற்றிருந்த ஆர்ஜி என்பது யாரை குறிக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக விசாரணை அமைப்பு முயன்று வருகின்றது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கினால் ஆதாரங்களை அழித்து விடுவார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது” என்றார். இதைத்தொடர்ந்து குப்தாவின் ஜாமீன் மனுவை 20ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மூலக்கதை