ஜிஎஸ்எல்வி 4ம் நிலை ஆராய்ச்சி ரூ. 2,729 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தினகரன்  தினகரன்
ஜிஎஸ்எல்வி 4ம் நிலை ஆராய்ச்சி ரூ. 2,729 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: அடுத்த 4 ஆண்டுகளில் 5 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் தயாரிக்க ரூ. 2,729.13 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தற்போது நடைபெறும் ஜிஎஸ்எல்வி 4ம் நிலை ஆராய்ச்சியைத் தொடரவும், வரும் 2021-2024 ஆண்டிற்குள் 5 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் தயாரிக்க ரூ. 2,729.13 கோடி நிதி ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம், புவியை படமெடுத்து அனுப்புதல், வெளிநாட்டு ஏவுகணை ஊடுருவல், தகவல் தொடர்பு, விண்வெளி அறிவியல் ஆகியவற்றில் திறம்பட செயல்படும், 2 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்த முடியும். மேலும் தொடர் ஆராய்ச்சியின் மூலம் திட்ட மேலாண்மை, செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துதல் உள்ளிட்ட இஸ்‌ரோவின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது, செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களுக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவது உள்ளிட்ட இந்தியாவின் ஆய்வுகள் தொடருவது உறுதிப்படுத்தப்படும். ஆண்டுக்கு இரண்டு என்ற விகிதத்தில் செயற்கைக்கோள்கள் அனுப்பப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் 2021-2024 ஆண்டிற்குள் முடிவடையும்’ என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர, கடந்த மார்ச் மாதம், புவியியல், தாதுவளங்கள் ஆகியவற்றில் கூட்டு ஒத்துழைப்பு, பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தை பயன்படுத்துவதில் ஒத்துழைப்பு என பொலிவியா நாட்டுடன் இந்தியா இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த, நாடு முழுவதும் உள்ள 158 மத்திய கல்வி நிறுவனங்களில், கூடுதலாக 2 லட்சத்து 14 ஆயிரத்து 766 கூடுதல் இடங்கள் உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் நடப்பு கல்வியாண்டில் (2019-20) 1 லட்சத்து 19 ஆயிரத்து 983 இடங்களும் அடுத்த கல்வியாண்டில் (2020-21) 95 ஆயிரத்து 783 புதிய இடங்களும் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 4,315.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை