ஆப்கானிஸ்தானில் திடீரென ஏற்பட்ட குண்டுவெடிப்பு: விளையாடிக்கொண்டிருந்த 7 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

தினகரன்  தினகரன்
ஆப்கானிஸ்தானில் திடீரென ஏற்பட்ட குண்டுவெடிப்பு: விளையாடிக்கொண்டிருந்த 7 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

லாஃஹ்மான்: ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி 7 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மிஹ்தர்லாம் புறநகர் பகுதியில் நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பு குறித்து அம்மாகாண ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் அஸதுல்லா தவ்லத்ஸி கூறியதாவது, காபூலின் கிழக்குப் பகுதியிலுள்ள லாஹ்மான் மாகாணத்தின் தலைநகரான மெஹ்தார்லம் புறநகர்ப் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. சிறுவர்கள் அனைவரும் தங்களின் வீடுகளுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த போது இந்த மர்ம குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். ஒவ்வொரு மாதமும் மர்மமான முறையில் நடக்கும் வெடிகுண்டுத் தாக்குதல்களால் மட்டும் ஆப்கானிஸ்தானில் சராசரியாக 120 பேர் உயிரிழப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுவரை ஆப்கானிஸ்தானில் 3 ஆயிரத்து 400 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு ஆய்வு நடத்தப்பட்டு மர்ம வெடிபொருட்கள் செயலிழக்க செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்து 700 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மூலக்கதை