மீண்டும் பிரதமராவது உறுதி என மோடி நம்பிக்கை: பல்வேறு திட்டங்கள் தயாரிக்க உத்தரவிட்டதாக தகவல்

தினகரன்  தினகரன்
மீண்டும் பிரதமராவது உறுதி என மோடி நம்பிக்கை: பல்வேறு திட்டங்கள் தயாரிக்க உத்தரவிட்டதாக தகவல்

டெல்லி: மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு, பிரதமர் அலுவலகம், நிதி  ஆயோக், அறிவியல் ஆலோசகருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நாடு முழுவதும் உள்ள 543  தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. முதல் கட்டத் தேர்தல் கடந்த  ஏப்ரல் 11ம் தேதி நடந்து முடிந்தது. இன்னும் 6 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மே 23-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய  தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இதில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. அன்றைய தினமே,  தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் 18 தொகுதிக்கும், மே 19-ம் தேதி 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்  நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள்  என அனைவரும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, மீண்டும் பிரதமராவது உறுதி என திடமான நம்பிக்கையில் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக, இரண்டாவது முறையாகப்  பொறுப்பேற்றவுடன் முதல் 100 நாட்களில் செய்ய வேண்டியவற்றிற்கு பிரதமர் மோடி திட்டமிட்டு வருகிறார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இரட்டை  இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டுவதை மையப்படுத்தி செயல் திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக் மற்றும்  அறிவியல் துறை முதன்மை ஆலோசகருக்கு மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை