தேர்தல் விளம்பர தூதர் டிராவிட்டுக்கு ஓட்டு ‘நஹி’

தினகரன்  தினகரன்
தேர்தல் விளம்பர தூதர் டிராவிட்டுக்கு ஓட்டு ‘நஹி’

பெங்களூரு: மக்களவை தேர்தலில் வாக்களிப்பதை அதிகரிப்பதற்காக நடத்தப்படும் விழிப்புணர்வு பிரசார விளம்பர தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த ஒரு மாதமாக தேர்தலில் வாக்களிப்பது நம் அனைவரின் ஜனநாயக கடமை என்று பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் வரும் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறாமல் உள்ளதால் வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளார். பெங்களூரு இந்திராநகரில் டிராவிட் வசித்து வந்தபோது வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தது. இந்திராநகரில் இருந்து வீட்டை ஆர்.எம்.வி. லேஅவுட்டிற்கு மாற்றியுள்ளார். வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும்போது அவர் வீடு மாறியுள்ள தகவலை அதிகாரிகளிடம்  அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். இதையடுத்து  வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யும் பாரம்-7ஐ பூர்த்தி செய்து கொடுத்ததால் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது.  வாக்காளர் பட்டியலில் குறைகளை போக்க மார்ச் 16ம் தேதி வரை காலவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ராகுல் டிராவிட் பாரம்-6ஐ பூர்த்தி செய்து கொடுக்கவில்லை. அவர் பாரத்தை பூர்த்தி செய்து கொடுக்காததால் வரும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளார். அனைவரையும் வாக்களிக்க கூறிவரும் ராகுல் டிராவிட்டுக்கே ஓட்டுரிமை இல்லை என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை