வேட்புமனு குளறுபடியால் பறிபோன வெற்றி குஜராத் பாஜ எம்எல்ஏ மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் 22ல் விசாரணை

தினகரன்  தினகரன்
வேட்புமனு குளறுபடியால் பறிபோன வெற்றி குஜராத் பாஜ எம்எல்ஏ மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் 22ல் விசாரணை

புதுடெல்லி: தேர்தலில் வெற்றி பெற்றும், வேட்புமனுவில் செய்த தவறால் அதை பறிகொடுத்த குஜராத் பாஜ எம்எல்ஏவின் மேல் முறையீட்டு மனு வரும் 22ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. குஜராத்தில் கடந்த 2017ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், துவாரகா தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாபுபா மேனக். இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் மேராமன்பாய் கோரியா, பாபுபா மேனக்கின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மேராமன்பாய் கோரியா தாக்கல் செய்த மனுவில், ‘‘மேனக் தாக்கல் செய்த வேட்புமனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை. தொகுதியின் பெயர் மற்றும் எண்ணை (82-துவாரகா) அவர் குறிப்பிடவில்லை. இதனால் அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும். அவருக்கு அடுத்து அதிக வாக்குகள் பெற்ற தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்’’ என கோரியிருந்தார். ஆனால், மனுவின்படி மேனக்கை வழி மொழிந்த தர்னந்த் புலாபாய் சவ்டா, 82-துவாரகா என குறிப்பிட வேண்டிய இடத்தில் தனது பெயரை எழுதியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேனக் வெற்றி செல்லாது என, கடந்த 12ம் தேதி தீர்ப்பளித்தது. அதேநேரத்தில், கோரியாவை வெற்றி பெற்றவராக அறிவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேனக் மேல் முறையீடு செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணை வரும் 22ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை