ஊழியர்கள் கோரிக்கை 20,000 பேர் வேலையை காப்பாற்றுங்கள்: ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் கோரிக்கை

தினகரன்  தினகரன்
ஊழியர்கள் கோரிக்கை 20,000 பேர் வேலையை காப்பாற்றுங்கள்: ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் கோரிக்கை

மும்பை: ஜெட்  ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 20 ஆயிரம் ஊழியர்களின் வேலையை  பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அந்நிறுவன ஊழியர்கள், தேசிய  விமானிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. குத்தகை அடிப்படையில்  இயக்கப்பட்ட விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல், வெளிநாட்டு  நிறுவனங்களிடம் ஜெட் ஏர்வேஸ்  நிர்வாகம் 100 கோடி டாலருக்கும் அதிகமாக கடன் நிலுவை வைத்துள்ளது. அதனால்  உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது 6  முதல் 7 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. போதிய நிதி இல்லாத  காரணத்தால் அந்நிறுவனத்தின் பொறியாளர்கள், மூத்த பணியாளர்களுக்கு  கடந்தாண்டு டிசம்பர் வரைக்கான ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதரப்  பிரிவு ஊழியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில்,  டெல்லியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் தலைமை அலுவலகத்தில் தேசிய விமானிகள் சங்கம்  மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானிகள், பொறியாளர்கள், பணியாளர்கள் கூட்டம்  நேற்று நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேசிய விமானிகள்  சங்க துணைத் தலைவர் அதிம் வலியானி, நிறுவனம் தொடர்ந்து செயல்பட ரூ.1,500 கோடி நிதி உதவி அளிக்க எஸ்பிஐ வங்கிக்கும், ஜெட் ஏர்வேசில் பணிபுரியும் 20 ஆயிரம் ஊழியர்களின் வேலையை காப்பாற்றி தரும்படி பிரதமர்  மோடிக்கும் கோரிக்கை விடுத்துள்ளோம்’’ என்று கூறினார்.கடந்த மாதம்,  எஸ்பிஐ தலைமையில் நடந்த கடன் வழங்குபவர்கள் கூட்டுக் குழு  பேச்சுவார்த்தையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் மறுசீரமைப்புக்கு ரூ.1,500 கோடி நிதி வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் கடந்த  வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தினருக்கும்  முக்கிய கடன்தாரரான எஸ்பிஐக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.  இந்நிலையில், நேற்று மாலை கூட்டுக் குழு கூட்டம் நடந்தது.

மூலக்கதை