உலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு சீனா வெற்றிகர சோதனை: நிலத்திலும் செல்லும்

தினகரன்  தினகரன்
உலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு சீனா வெற்றிகர சோதனை: நிலத்திலும் செல்லும்

பீஜிங்: நீரிலும், நிலத்திலும் சென்று தாக்கும் வகையில் ஆளில்லா ஆயுத படகை சீனா வெற்றிகரமாக சோதித்துள்ளது. இது போன்ற படகை உலகில் முதல் முறையாக சீனா தயாரித்துள்ளது. உலகின் மிகப் பெரிய ராணுவத்தை கொண்டுள்ள சீனா, கடந்த சில ஆண்டுகளாக புதிய ரக ஆயுதங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது ஆளில்லா ஆயுத படகு ஒன்றை சீனா உருவாக்கி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய இந்தப் படகுக்கு ‘கடற் பல்லி’ (மரைன் லிசர்ட்) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படகு செயற்கைக்கோள் கட்டுப்பாட்டில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும். 12 மீட்டர் நீளமுள்ள இந்த படகு டீசலில் இயங்கக் கூடியது. அதிகபட்சமாக 50 நாட்ஸ் வேகத்தில் 1,200 கி.மீ தூரம் வரை செல்லும் திறன் படைத்தது. இந்த படகு தரையிலும் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த படகில் ரேடார் கருவிகள், இரண்டு இயந்திர துப்பாக்கிகள், கப்பல் மற்றும் விமானத்தை தாக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. தீவுப் பகுதியில் தாக்குதல் நடத்தவும், கடலோர பாதுகாப்பு பணிக்கும் இந்த ஆளில்லா படகு பெரிதும் உதவியாக இருக்கும். ஆளில்லா தீவுகளிலும் இந்த படகை 8 மாத காலம் வரை செயலற்ற நிலையில் பதுக்கி வைத்திருக்க முடியும். சீனாவின் ‘பேடோ’ நேவிகேஷன் செயற்கைக்கோள் மூலம் இந்த படகு செயல்படும். ஆளில்லா விமானங்களுடன் இணைந்து போர் புரியும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் நீரிலும், நிலத்திலும், வானிலும் ஒருங்கிணைந்த ஆளில்லா போர் முறைக்கு பயன்படுத்தும் வகையில் இந்த படகு தயாரிக்கப்பட்டுள்ளது. தெற்கு சீன கடல் பகுதியில் பல தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த தீவுகளில் பாதுகாப்பு பணிக்கு இந்த ஆளில்லா ஆயுத படகுகளை சீனா பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.

மூலக்கதை