புலிமுருகன் பாதிப்பிலிருந்து மீளாத மதுர ராஜா இயக்குனர்

தினமலர்  தினமலர்
புலிமுருகன் பாதிப்பிலிருந்து மீளாத மதுர ராஜா இயக்குனர்

சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் இயக்குனர் வைஷாக் இயக்கத்தில் மதுர ராஜா என்கிற படம் வெளியாகியுள்ளது. இந்த இயக்குனர்தான் மோகன்லால் நடித்த புலி முருகன் என்கிற சூப்பர் ஹிட் படத்தையும் இயக்கியவர். புலிமுருகன் அளவிற்கு ரசிகர்களை கவரும் அதிகப்படியான அம்சங்கள் இல்லாமல் இந்த படம் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் புலிமுருகனை நினைவூட்டும் விதமாகவே சில காட்சியமைப்புகளையும் கதாபாத்திரங்களையும் வடிவமைத்து உள்ளார் இயக்குனர் வைசாக்.

குறிப்பாக புலிமுருகன் படத்தில் மோகன்லால் சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து, தனி ஆளாக தனது தம்பியை வளர்த்து ஆளாக்க கஷ்டப்படுவார். அதேபோல இந்த படத்தின் நாயகி அனுஸ்ரீ சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்து தனது ஒரே தங்கையான மஹிமாவை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்குகிறார்.

புலிமுருகன் படத்தில் மோகன்லாலின் தந்தை காட்டுக்கு வேட்டையாடச் சென்ற இடத்தில் புலியால் அடித்து கொல்லப்படுவார். இந்தப்படத்தில் காட்டுக்குள் இருக்கும் போலி மது தயாரிக்கும் வில்லனை கைது செய்யச்செல்லும் நாயகியின் அப்பா நரேன், வில்லனின் வளர்ப்பு நாய்களால் ஏவி விடப்பட்டு கொலை செய்யப்படுவார்.

அதே போல புலிமுருகன் படத்தில் மோகன்லால் தனது தம்பி மீது மிகுந்த பாசம் வைத்து இருப்பார். அவருக்காக பல சோதனைகளைத் தாங்கி கொள்வார். இந்த படத்திலும் மம்முட்டி தனது வளர்ப்பு தம்பியான ஜெய் மீது உயிரையே வைத்து இருப்பார்.

படத்தில் ஜெகபதிபாபு, சித்திக் உள்ளிட்ட பல நடிகர்கள் புலிமுருகன் படத்திலும் நடித்தவர்கள் தான்.. அது மட்டுமல்ல புலிமுருகன் படத்திற்கு இசையமைத்த தீபக்தேவ் தான் இந்த படத்திற்கும் இசையமைத்து இருக்கிறார். கூடவே புலி முருகன் படத்தின் பின்னணி இசையில் இருந்தும் சில பிஜிஎம்களை இந்த படத்திலும் பயன்படுத்தியுள்ளார்.

அந்த வகையில் இயக்குனர் வைசாக் புலிமுருகன் பாதிப்பில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.

மூலக்கதை