வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை : நாம் தமிழர் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தினகரன்  தினகரன்
வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை : நாம் தமிழர் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி : நாடு முழுவதும் 17வது மக்களை தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் முதற்கட்டமாக கடந்த ஏப்.,11ம் தேதி 20 மாநிலங்களில் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர். நாளையுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது. மக்களவை தேர்தலையொட்டி லோக்நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆட்சி செயற்பாட்டு வரைவு எனும் பெயரில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார். மாநில உரிமை, மொழி உரிமை என்று பல்வேறு திட்டங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. முக்கியமாக தமிழக நலனுக்காக நிறைய அறிவிப்புகள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை என கூறி நாம் தமிழர் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் சந்திர சேகரன் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்த நிலையில், அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னம் தெளிவாக இல்லை என அக்கட்சியின் வட சென்னை தொகுதி வேட்பாளர் காளியம்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விளக்கமளித்திருந்த தேர்தல் ஆணையம், வாக்கு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தப்பட்டு அனைத்து தொகுதிக்கும் அவை அனுப்பப்பட்டு விட்டதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து ஒரு கட்சியின் சின்னம் வாக்காளர்கள் மனதில் இருந்தாலே அவர்கள் சரியாக வாக்குப்போடுவார்கள் எனக்கூறி வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை