பி.எம். நரேந்திர மோடி படத்தை பார்த்துவிட்டு தடை விதிப்பு பற்றி தேர்தல் ஆணையம் அறிக்கை தர உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
பி.எம். நரேந்திர மோடி படத்தை பார்த்துவிட்டு தடை விதிப்பு பற்றி தேர்தல் ஆணையம் அறிக்கை தர உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பி.எம்.நரேந்திர மோடி படத்தை பார்த்துவிட்டு தடை விதிப்பு பற்றி தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் படத்தை பார்த்துவிட்டு தடையை தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்து தனது கருத்தை அறிக்கையாக வரும் 22ம் தேதிக்குள் சீலிடப்பட்ட கவரில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து பி.எம்.நரேந்திரமோடி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசியல் நோக்கத்தோடு படம் வெளியிடப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். மறுபுறம், படத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றம் மற்றும் டெல்லி, மும்பை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மோடி படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தது. ஆனால் படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இன்னும் சான்றிதழ் வழங்காததால், படத்தை வெளியிடுவது குறித்து நீதிபதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மேலும் படம் வெளியாவது விதிமீறலா என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, தேர்தல் ஆணையம் உடனடியாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை தெரிவிக்கும்படி கூறியுள்ளது. தணிக்கை வாரியம் அளிக்கும் தகவலின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் என கூறப்பட்டிருந்தது. இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 11ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. இந்த முடிவுக்கு தடை விதித்து கடந்த 10ம் தேதி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, படத்தின் தயாரிப்பு நிறுவனம் கடந்த 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த படத்தை முழுமையாக பார்க்காமலே படத்தின் மீது குற்றம் சுமத்துகிறார்கள் என குற்றம் சாட்டப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வரும் 22ம் தேதிக்குள் இந்த படத்தினை முழுமையாக பார்த்துவிட்டு தேர்தல் நேரத்தில் வெளியிடலாமா, வேண்டாமா என்பது குறித்து அறிக்கை தர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் 22ம் தேதிக்குள் இதுகுறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யா உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிக்கைக்கு பிறகே படத்தின் வெளியீடு குறித்த முடிகளை உச்சநீதிமன்றம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை