தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது: மாநிலம் முழுவதும் பண பட்டுவாடா

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது: மாநிலம் முழுவதும் பண பட்டுவாடா

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இதையடுத்து, ஆளுங்கட்சியினர் போலீசார் ஆதரவுடன் கடைசிநேர பண பட்டுவாடாவை தொடங்கியுள்ளனர்.

இதுபற்றி தேர்தல் ஆணையமும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுங்கட்சியினர் பணம் பதுக்கி வைக்கும் இடம்குறித்து வருமான வரித்துறை மற்றும் பறக்கும் படையிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதி, 18 சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18ம் தேதி நடைபெறுகிறது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. அதேநேரம் நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

கடைசி கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதன்படி ஒரு ஓட்டுக்கு ரூ. 1000 ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரை வழங்கி வருகிறார்கள். சில இடங்களில் தலா ரூ. 500 வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், அரசியல் கட்சியினர் கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்வார்கள் என்று, தேர்தல் ஆணையம் நினைத்துதான் அதிகளவில் பறக்கும் படை, கண்காணிப்பு குழு சோதனை மற்றும் வருமான வரித்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறினர்.

அதனால் தமிழகத்தில் பெரிய அளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் வராது என்றே நடுநிலையாளர்கள் நினைத்தனர். ஆனால், தமிழகத்தில் தேர்தல் ஆணையம் உதவியுடன் ஆளுங்கட்சியினர் கடந்த 2 நாட்களாக பணம் பட்டுவாடா நடத்தி வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

திமுக தலைவர் மு. க. ஸ்டாலினிடம் தேர்தல் ஆணையம் மீது பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். ஒவ்வொரு பூத்துக்கும் 30 அதிமுகவினரை தேர்வு செய்துள்ளனர்.

அதில் 25 ஓட்டுக்கு ஒருவர் வீதம் பட்டியல் தயாரித்து நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலை வைத்துக் கொண்டு வீடு வீடாக அதிமுகவினர் பண விநியோகத்தில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை ஈடுபட்டனர்.

ஆனால் இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடமும் போலீசாரிடமும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் கடைசி நேரத்தில் பண பட்டுவாடா நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது.

இந்த தேர்தலில் கடந்த சனிக்கிழமை முதல் ஆளுங்கட்சியினர் ஓட்டுக்கு பணம் வழங்கி வருகிறார்கள். ஓட்டுக்கு ரூ. 2 ஆயிரமும், அதற்கு மேலும் வழங்கி வருகிறார்கள்.

இதுபற்றி ஆதாரத்துடன் வருமான வரித்துறை, பறக்கும் படை அதிகாரிகளுக்கு நாங்கள் புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் இல்லை. குறிப்பாக, அதிமுகவை சேர்ந்த 2 முக்கிய விஐபிக்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அவர்கள் பிரசாரம் செல்லும் இடங்களுக்கு செல்லும் போலீஸ் கான்வாய் மூலம்தான் பணமே ஒவ்வொரு தொகுதிக்கும் செல்கிறது. தேனி தொகுதி முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பகிரங்கமாக பணம் பட்டுவாடா நடைபெற்று வருகிறது.

அதேபோன்று, தமிழகத்தில் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதியை குறிவைத்தே ஆளுங்கட்சியினர் வீடு வீடாக சென்று பணம் விநியோகம் செய்கின்றனர்.

பணம் கொடுப்பதற்கு போலீசாரும் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். அதனால்தான், நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தோம்.

அரசுக்கு ஆதரவாக உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று கூறினோம். ஆனால், தேர்தல் ஆணையம் எங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.

டி. ஜிபியை மட்டும் மாற்றி உள்ளனர். ஆனாலும், இன்னும் உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்டங்களில் உள்ள போலீஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே உள்ளனர்.

வருமான வரித்துறையும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களே குறிவைத்து சோதனை நடத்துகிறார்கள். ஆளுங்கட்சியினர் மீது வெறும் கண்துடைப்புக்காகவே வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள்.

இன்னும் தேர்தலுக்கு மூன்று நாட்களே உள்ளது. இதையடுத்து ஆளுங்கட்சியர் பணப்பட்டுவாடாவை தீவிரமாக்குவார்கள்.

இனியாவது தேர்தல் ஆணையம் விழித்துக்கொண்டு தமிழகத்தில் நியாயமான தேர்தல் நடைபெற ஒத்துழைக்க வேண்டும்’’ என்றனர்.

.

மூலக்கதை