சென்னையில் எம்எல்ஏக்கள் தங்கும் விடுதியில் உள்ள அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீட்டில் சோதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னையில் எம்எல்ஏக்கள் தங்கும் விடுதியில் உள்ள அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீட்டில் சோதனை

சென்னை: வருவாய் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தங்கியிருந்த எம்எல்ஏ விடுதியில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை வெறும் கண்துடைப்பு நாடகம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காரணம் அவர் தேனியில் கடந்த ஒரு மாதமாக தங்கியிருந்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்படி இருக்கும் போது சென்னையில் அவர் வீட்டில் சோதனை நடத்தி இருப்பது கேலிக்கூத்தாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் தான் தேர்தலுக்கு பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெறுவதாக தேர்தல் ஆணையர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல், தமிழகம் முழுவதும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பல கோடி ரூபாய் பணம், தங்க நகைகள், பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் தங்கும் விடுதியில் தேர்தல் பணப்பட்டுவாடாவுக்காக கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படையினருக்கு ேநற்று இரவு அதிரடியாக எம்எல்ஏக்கள் விடுதியின் சி-பிரிவில் உள்ள வருவாய் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் அறை, அளுங்கட்சி எம்எல்ஏக்கள் அறையில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

அதேநேரம், வருவாய் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கடந்த 1 மாதமாக தேனி மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஒரு மாதமாக சென்னைக்கு அவர் வராத நிலையில் திடீரென சென்னை எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

மதுரையில் உள்ள அவரது வீடு மற்றும் தற்போது தங்கியிள்ள இடங்களில் எந்த வித சோதனையும் நடத்தாமல் யாரும் இல்லாத வீட்டில் திடீரென நேற்று இரவு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் பணம் பட்டுவாடாவை திசைத்திருப்பவே வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனை நடத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தமிழகத்தில் குறிப்பாக எதிர்க்கட்சிகள் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை தொடர் சோதனை நடத்தி வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

.

மூலக்கதை