‘ராம்பூரின் மாலை நேரங்கள் வண்ணமயமாக மாறிவிடும்’ குற்றச்சாட்டை நிரூபித்தால் தேர்தல்ல நிக்கல! நடிகை ஜெயபிரதா விவகாரத்தால் அசம்கான் திடீர் முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘ராம்பூரின் மாலை நேரங்கள் வண்ணமயமாக மாறிவிடும்’ குற்றச்சாட்டை நிரூபித்தால் தேர்தல்ல நிக்கல! நடிகை ஜெயபிரதா விவகாரத்தால் அசம்கான் திடீர் முடிவு

உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜ சார்பில் ராம்பூர் தொகுதியில் போட்டியிடும் நடிகை ஜெயபிரதா, தன்னுடைய 14 வயதில் சினிமாவுக்கு நடிக்க வந்தவர். ஆந்திராவை சேர்ந்த நடிகை ஜெயபிரதா, தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

தமிழில் சலங்கை ஒலி, மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், ஏழைஜாதி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், 1994ல் என். டி. ராமாராவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். பின்னர் அவரிடமிருந்து ஜெயபிரதா பிரிந்து சென்று, சந்திரபாபு நாயுடு பிரிவில் சேர்ந்தார்.

கடந்த 1996ல் ராஜ்ய சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்ட அவர், சந்திரபாபு நாயுடுவுடனான கருத்து வேற்றுமையால், தெலுங்கு தேசம் கட்சியை விட்டு வெளியேறி, முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். அதன் பின்னர் கடந்த 2004 மற்றும் 2009 தேர்தலில் உத்திரப் பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

தற்போது சமாஜ்வாதியில் இருந்து பாஜவில் ேசர்ந்து அதே ராம்பூர் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடுகிறார்.

முன்னதாக, ராம்பூர் தொகுதியில் பிரசாரத்தில் ஜெயபிரதா பேசுகையில், ‘‘சமாஜ்வாதி கட்சியில் செல்வாக்கு உயர்ந்ததால், அக்கட்சியில் இருந்த மூத்த தலைவர் அசம்கானுக்கு பிடிக்கவில்லை. அகிலேஷ் யாதவுடன் அமர்சிங்குக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் என்னையும், அமர்சிங்கையும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தனர்.

ஒரு கட்டத்தில் அசம்கான் என்மீது ஆசிட் ஊற்ற முயன்றார். ‘மார்பிங்’ செய்யப்பட்ட ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார்’’ என்று கண்ணீர்விட்டு கதறியபடி புகார் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சம்பல் மாவட்ட சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் பிரசாரத்தில் பேசுகையில், “இனிமேல், ராம்பூரின் மாலை நேரங்கள், வண்ணமயமாக மாறிவிடும். வாக்காளர்களை ஜெயபிரதா மகிழ்விப்பார்” என்று அவர் பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

இதுதொடர்பான புகாரின்பேரில், அசம் கான் மீது ஹயத்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே, தனது கருத்து திரித்து கூறப்பட்டு விட்டதாக அசம் கான் விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கிடையே, ஜெயபிரதாவை எதிர்த்து ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் அசம்கான் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால், ராம்நகர் தொகுதியில் பாஜ - சமாஜ்வாதி கட்சிக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது.

தேர்தல் பிரசாரத்தில் அசம்கான், ஜெயபிரதா குறித்து பேசிய விவகாரம் பெரிதாக பேசப்படுவதால், இதுகுறித்து அசம்கான் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘‘என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தேர்தலில் போட்டியிடவில்லை.

என்மீது தேவையற்றி பழிபோடப்படுகிறது’’ என்று இன்று அதிரடியாக அறிவித்துள்ளதால் உத்தரபிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை