உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தில் சித்தப்பு தொந்தரவு: தாங்க முடியல! மாயாவதி - அகிலேஷ் கூட்டணிக்கு சிக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தில் சித்தப்பு தொந்தரவு: தாங்க முடியல! மாயாவதி  அகிலேஷ் கூட்டணிக்கு சிக்கல்

உத்தரபிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவின் சகோதரர் சிவபால் யாதவ். இவருக்கும், முலாயம் சிங் மகனான முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியில் இருந்து விலகி பிரகதிஷீல் சமாஜ்வாதி லோஹியா என்ற தனிக் கட்சி சிவபால் யாதவ் தொடங்கினார்.

இவர், சம்பல் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கூறியதாவது: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, உத்தரப் பிரதேச முதல்வராக இருந்தபோது, சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கை பல வழக்குகளில் சிக்க வைத்தார். கட்சித் தொண்டர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்தார்.

ஆனால், தற்போது அதே மாயாவதியுடன் அகிலேஷ் யாதவ் கை கோர்த்து நிற்கிறார். சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி, அரசியல் கட்சிகளின் கூட்டணி அல்ல; வஞ்சகர்களின் கூட்டணி.
மக்களவைத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சி 35 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ஆனால், முலாயம் சிங்கின் கட்டுப்பாட்டில் கட்சி இருந்தபோது மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இந்த தேர்தலில், சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ்-ராஷ்ட்ரீய லோக் தளம் கூட்டணி 10 தொகுதிகளில் தேறாது.

பிரகதிஷீல் சமாஜ்வாதி பிரகதிஷீல் கட்சி உத்தரப் பிரதேசத்தில் 60 தொகுதிகளிலும், இதுதவிர 11 மாநிலங்களில் 27 இடங்களிலும் போட்டியிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அகிலேஷ் யாதவுக்கு எதிராக, தனது சித்தப்பா சிவபால் யாதவ் தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருவதாக தொண்டர்கள் கருதுகின்றனர்.

.

மூலக்கதை