2014 பாஜ தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? மோடியை கிண்டலடித்து லாலு பிரசாத் ‘டப்ஸ்மாஷ்’

தமிழ் முரசு  தமிழ் முரசு
2014 பாஜ தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? மோடியை கிண்டலடித்து லாலு பிரசாத் ‘டப்ஸ்மாஷ்’

ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் சிறையில் அடைக்கப்பட்ட லாலு, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் அடிக்கடி சேர்ந்து ஓய்வெடுத்து வருவார்.

அப்போது, அவரது குடும்பத்தினரை எளிதாக சந்திக்கும் லாலு, மருத்துவமனையில் இருந்துகொண்டே அரசியல் ஆலோசனை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருகிறார்.

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதி அளிக்கும் குரல் பதிவு குறித்து, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், வாயசைத்து ‘டப்ஸ்மாஷ்’ செய்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. மேலும் லாலு பிரசாத் யாதவ், தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் அந்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ‘கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது அனைத்து இந்தியர்களின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும். இனி நல்ல காலம் பிறக்கும்’ என்று பிரதமர் மோடி வாக்குறுதி குரல் பதிவிற்கு, வாயசைத்து லாலு பிரசாத் டப்ஸ்மாஷ் செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அவரது பேஸ்புக் பக்கத்தில், ‘இடஒதுக்கீட்டு எதிர்ப்பு மற்றும் நரேந்திர மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மக்கள் பிரசாரம் செய்ய வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், ‘மோடி அரசாங்கம் இடஒதுக்கீட்டை முடிக்க முற்பட்டபோது, தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்கள் பற்றிய சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகள் எப்படி இருந்தன?’ என்றும் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சிறையிலும், மருத்துவமனையிலும் மாறிமாறி இருக்கும் லாலு, தற்போது தேர்தல் பிரசாரத்துக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும், ‘டப்ஸ்மாஷ்’ மூலம் கலக்கி வருவது தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

இந்த வீடியோ ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் வைரலானது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை