பெரம்பூர் தொகுதி மக்களுக்கு உயிர் மூச்சு உள்ளவரை பாடுபடுவேன்: அதிமுக வேட்பாளர் ராஜேஷ் உறுதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெரம்பூர் தொகுதி மக்களுக்கு உயிர் மூச்சு உள்ளவரை பாடுபடுவேன்: அதிமுக வேட்பாளர் ராஜேஷ் உறுதி

சென்னை; பெரம்பூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக, தனது உயிர் மூச்சு உள்ளவரை மக்களுக்கு பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளர் ஆர். எஸ். ராஜேஷ் உறுதி கூறினார். பெரம்பூர் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர். எஸ். ராஜேஷ் நேற்று மாலை கொடுங்கையூர் பகுதிகளில் மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக ஏராளமான கட்சி தொண்டர்களும் மக்களும் இரட்டை இலை சின்னத்துடன் வாக்கு சேகரித்தனர்.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கால்களில் விழுந்து வணங்கிவிட்டு ஆர். எஸ். ராஜேஷ் பேசுகையில்,

 என்னை பெரம்பூர் தொகுதி வேட்பாளராக பரிந்துரை செய்த எனது குருவும் ஆசானுமாகிய மதுசூதனனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். என்மீது அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் வைத்துள்ள நம்பிக்கையை போற்றும் வகையில், எனது பணி சிறப்பாக இருக்கும்.

என் உயிர்மூச்சு உள்ளவரை, தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும், அவர்களின் நலனுக்காகவும் பாடுபடுவேன். எனவே, நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து, என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என ஆர். எஸ். ராஜேஷ் உறுதி கூறினார்.

இப்பிரசாரத்தில் அதிமுக நிர்வாகிகள் உட்பட கூட்டணி கட்சியினரும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
 

.

மூலக்கதை