பாதுகாப்பான இந்தியாவை உருவாக்கிய மோடி ஆட்சி தொடர வேண்டும்: பாஜ செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் பிரசாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாதுகாப்பான இந்தியாவை உருவாக்கிய மோடி ஆட்சி தொடர வேண்டும்: பாஜ செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் பிரசாரம்

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாமக வேட்பாளர் டாக்டர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக தொகுதி ஒருங்கிணைப்பாளர் அ. வேத சுப்பிரமணியம் பீர்க்கன்கரணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று மாம்பழம் சின்னத்துக்கு வாக்குகளை திரட்டினார். அப்போது அவர் மோடி அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பிரசாரத்தில் வேத சுப்பிரமணியம் பேசுகையில், “மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அண்டை நாடான பாகிஸ்தான், இலங்கை போன்ற சிறிய நாடுகள் இந்தியாவை மிரட்டி வந்தது. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள், தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வந்தது.இன்றைக்கு மோடியின் ஆட்சியில் பாகிஸ்தான் கதிகலங்கி போய் இருக்கிறது. புல்வாமா தாக்குதலின்போது நம்முடைய பகுதியை சேர்ந்த வீரர் அபிநந்தன் கைது செய்யப்பட்டார்.

மோடியின் ராஜதந்திரத்தால் வரலாற்றில் இடம் பிடிக்கும் வகையில் அவர் மீட்கப்பட்டது மட்டுமல்லாமல், பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை மோடி வீரர்களுக்கு உருவாக்கி கொடுத்தார். இன்றைக்கு படைவீரர்கள் முதல் விவசாயிகள் வரை அனைவருக்கும் காவலாளியாக மோடி இருக்கிறார்.

மோடியின் ஆட்சி மீண்டும் தொடர வேண்டும்” என்றார்.   பிரசாரத்தின்போது அதிமுக லயன்குமார், பாஜ தாம்பரம் தொகுதி அமைப்பாளர் பொற்றாமரை சங்கரன்,  பீர்க்கன்கரணை பாஜ தலைவர் விஜயபாரதி, பாஷ்யம் ரவி, ஆனந்தி, பூன்வட், தரணி குமாரி, பாமக தேவா உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை