பூந்தமல்லி தொகுதியில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை: அதிமுக வேட்பாளர் வைதியநாதன் உறுதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பூந்தமல்லி தொகுதியில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை: அதிமுக வேட்பாளர் வைதியநாதன் உறுதி

பூந்தமல்லி: வடமாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நிற்பதற்கு பூந்தமல்லி தொகுதியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளர் க. வைதியநாதன் உறுதி கூறினார். பூந்தமல்லி பைபாஸ் சாலை அருகே நேற்று டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, அம்பேத்கர் சிலைக்கு பூந்தமல்லி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் க. வைதியநாதன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

பின்னர் பூந்தமல்லி பகுதியில் என் மண், என் மக்கள் என்ற முழக்கத்துடன் அதிமுக வேட்பாளர் வைதியநாதன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தில் வைதியநாதன் கூறுகையில், சென்னையிலிருந்து வடமாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நிற்பதற்கு பூந்தமல்லியில் புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும்.

  மேலும், தென்தமிழக மாவட்டங்களுக்கு பூந்தமல்லியிலிருந்து குளிர்சாதன வசதியுடன் அரசு பேருந்துகள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

குமணன்சாவடி சந்திப்பில் பிரமாண்டமான மேம்பாலம் அமைக்கப்படும். அதேபோல் பாரிவாக்கம், நசரத்பேட்டை சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்கப்படும்.

பூந்தமல்லி நகராட்சிப் பகுதியில் சொத்துவரியைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்.

பூந்தமல்லி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் ஆழ்துளை கிணற்றிலிருந்து நீர் உறிஞ்சப்படுவது முறைப்படுத்தப்படும் என அதிமுக வேட்பாளர் வைதியநாதன் உறுதி கூறினார்.

  இதில் மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், முன்னாள் எம்எல்ஏ மணிமாறன், ஒன்றிய செயலாளர்  திருநாவுக்கரசு, முன்னாள் எம்பி ஜெகநாதன், மாவட்ட நிர்வாகிகள் ஜாவித் அகமது, கே. எஸ். ரவிச்சந்திரன், ரவீந்திரநாத், தேவேந்திரன், சார்லஸ், கோபிநாத், ஹரிக்குமார், முத்துரங்கன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

.

மூலக்கதை