எங்கள் ஓட்டு உதயசூரியனுக்கே தயாநிதி மாறனிடம் மக்கள் உறுதி; செல்லும் இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
எங்கள் ஓட்டு உதயசூரியனுக்கே தயாநிதி மாறனிடம் மக்கள் உறுதி; செல்லும் இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு

சென்னை: எங்கள் ஓட்டு உதயசூரியனுக்கே என்று மத்திய சென்னையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் தயாநிதி மாறனிடம் பொதுமக்கள் உறுதியளித்தனர். செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் நேற்று சேத்துபட்டு, நுங்கம்பாக்கம் தொலைதொடர்பு ஊழியர்கள் குடியிருப்பு, திருவல்லிக்கேணி எல்லீஸ் ரோடு, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சேத்துப்பட்டு குடிசைப் பகுதியில் வீடுவீடாகச் சென்று தயாநிதி மாறன் வாக்கு சேகரித்தார்.

 அப்போது, பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள், ‘‘நாங்கள் எப்போதும் உதயசூரியனுக்குத்தான் ஓட்டுப் போடுவோம்.

மத்திய பாஜ அரசையும், மாநில எடப்பாடி அரசையும் அகற்ற இந்த முறையும் உதயசூரியனுக்கே ஓட்டுப் போடுவோம்’’ என்று தயாநிதி மாறனிடம் உறுதியளித்தனர்.
இந்நிலையில், மனித நேய ஜனநாயக கட்சி சார்பில், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மண்ணடி தம்புச்செட்டி தெருவில் நேற்று இரவு மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்டு மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேசியதாவது: மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியை அகற்றும் நாள் வெகு அருகில் வந்துள்ளது.வருகிற 18ம் தேதி, ஒவ்வொருவரும் உதயசூரியனுக்கு வாக்களிப்பதன்மூலம் மத்திய, மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்பும் நாள் ஆகும். மத்தியில் ஆளும் மோடி அரசு மக்களை வஞ்சிக்கும் விதமாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது.

இதனால் பொதுமக்கள் துயரத்திற்கு ஆளாகினர். நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்தனர்.

ஜிஎஸ்டி வரி கொண்டு வந்து சிறு, குறு தொழிற்சாலைகளை மூடியதால் தொழிலாளிகளின் வேலைவாய்ப்பு பறிபோனது.

தமிழக மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கினார்கள். எடப்பாடி அரசு மோடிக்கு ஜால்ரா அடித்து வருகிறது.

பிரிவினைவாதத்தை உருவாக்கி வெற்றிபெறலாம் என்று நினைப்பது ஒருபோதும் நடக்காது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அண்ணாநகர் திமுக பகுதி செயலாளர் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

போதிய ஆதாரம் இருந்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நாள் விரைவில் வரும்.

நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும். இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.

.

மூலக்கதை