இம்ரான் தாஹிர் அபார பந்துவீச்சு சூப்பர் கிங்சுக்கு 7வது வெற்றி...கேகேஆர் ஏமாற்றம்

தினகரன்  தினகரன்
இம்ரான் தாஹிர் அபார பந்துவீச்சு சூப்பர் கிங்சுக்கு 7வது வெற்றி...கேகேஆர் ஏமாற்றம்

கொல்கத்தா: நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சீசனில் தனது 7வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசியது. அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நைட் ரைடர்ஸ் அணியில் கிறிஸ் லின்,  சுனில் நரைன், ஹாரி கர்னி இடம் பெற்றனர். தொடக்க வீரர்களாக லின், நரைன் களமிறங்கினர். எடுத்த எடுப்பிலேயே லின் அதிரடியில் இறங்க, கொல்கத்தா ஸ்கோர் எகிறியது. மறு முனையில் 7 பந்துகளை சந்தித்த நரைன் 2 ரன் மட்டுமே எடுத்து சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். லின் - ராணா ஜோடி 2வது  விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்தது. ராணா 21 ரன் எடுத்து தாஹிர் சுழலில் வெளியேற, அடுத்து வந்த உத்தப்பா முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி நடையை கட்டினார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ளிய லின் அரை சதம் அடித்தார். அபாரமாக விளையா டிய அவர் 82 ரன் (51 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி தாஹிர் சுழலில் ஷர்துல் தாகூரிடம்  பிடிபட்டார். ரஸ்ஸல் 10, கேப்டன் கார்த்திக் 18 ரன்னில் பெவிலியன் திரும்பினர். கடைசி 2 பந்தில் ஷுப்மான் கில் (15 ரன்), குல்தீப் யாதவ் (0, ரன் அவுட்) விக்கெட்டை பறிகொடுக்க, நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8  விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. சாவ்லா 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.சென்னை பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் 4, ஷர்துல் 2, சான்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. வாட்சன், டு பிளெஸ்ஸி இருவரும்  துரத்தலை தொடங்கினர். வாட்சன் 6 ரன் எடுத்து கர்னி பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். டு பிளெஸ்ஸி 24 ரன், அம்பாதி ராயுடு 5 ரன்னில் பெவிலியன் திரும்பினர். கேதார் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். ரெய்னா - கேப்டன் டோனி ஜோடி 5வது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்தது. டோனி 16 ரன் எடுத்து நரைன் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் விளையாடிய ரெய்னா - ஜடேஜா ஜோடி, சென்னை  அணிக்கு 7வது வெற்றியை வசப்படுத்தியது. சிஎஸ்கே 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்து வென்றது. ரெய்னா 58 ரன் (42 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஜடேஜா 31 ரன்னுடன் (17 பந்து, 5 பவுண்டரி)  ஆட்டமிழக்காமல் இருந்தனர். தாஹிர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.சென்னை அணி 8 போட்டியில் 7 வெற்றி, 1 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

மூலக்கதை