ஐசிசி உலக கோப்பை தொடர் இந்திய அணி இன்று தேர்வு

தினகரன்  தினகரன்
ஐசிசி உலக கோப்பை தொடர் இந்திய அணி இன்று தேர்வு

மும்பை: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி மும்பையில் இன்று அறிவிக்கப்படுகிறது.கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை தொடர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகளை சேர்ந்த  கிரிக்கெட் வாரியங்கள், தங்கள் அணிகளை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதற்கான கெடு ஏப்ரல் 23ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவினர்  மும்பையில் இன்று கூடி இந்திய அணி வீரர்களைத் தேர்வு செய்கின்றனர். இந்த கூட்டத்தில் கேப்டன் விராத் கோஹ்லியும் பங்கேற்கிறார். பேட்டிங் வரிசையில் 4வது வீரராகக் களமிறங்குவது யார் என்பதில் தான் கடும் போட்டி நிலவுகிறது. விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட், அம்பாதி ராயுடு,  லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.அதே போல, ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா தனது இடத்தை உறுதி செய்துள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா மற்றும் விஜய் ஷங்கர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. 2வது விக்கெட் கீப்பராக வாய்ப்பு  கிடைக்கும் என்று பன்ட், கார்த்திக் எதிர்பார்க்கின்றனர். இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜூன் 5ம் தேதி தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது.

மூலக்கதை