பாலையில் பால் வார்க்கும் தொடர் மழை

தினகரன்  தினகரன்
பாலையில் பால் வார்க்கும் தொடர் மழை

துபாய்: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரிகளில் ஒன்றாகும். ஆனால் ஏப்ரல் மாத நடுவில் மிதமாக தொடங்கும் வெயில் காலம் செப்டம்பர் வரை கடும் வெப்பம்  நிலவும். எனினும் கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாறி அவ்வப்போது மழையோடு குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதற்கு முக்கிய காரணியாக மரங்கள் அதிகம் வளர்க்கப்படுவதும மட்டுமின்றி கிளவுட் சீடிங்  எனப்படும் மேக விதைப்பு தொழில்நுட்பமும் ஒரு காரணமாகும். விமானத்தின் மூலம் வான்பகுதியில் ரசாயன பவுடர் தூவி செய்யப்படும் மேக விதைப்பு  தொழில்நுட்பம் மூலம் சென்ற ஆண்டு 15 முதல் 20 சதவீதம் வரை இப்பகுதியில் அதிகம் மழை பெறப்பட்டுள்ளது. இவ்வாண்டு தொடக்கம்  முதல் 88 முறை கிளவுட் சீடிங் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நகரங்களான அல் அய்ன், துபாய், ராசல் அல் கைமா, புஜேரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5 விமானங்கள் மூலம் இப்பணி  மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதன் பலனாக தொடர்ச்சியாக நல்ல மழை பெய்து வருகிறது.   வெயில் தலைதூக்கும்  காலமான ஏப்ரம் மாதம் தொடங்கிய நிலையில் தற்போது பலத்த மழை பெய்து குளுகுளு கால நிலை நிலவி வருகிறது. நேற்று  முன்தினம் மாலை பல இடங்களில் கனமழை பெய்து, சாலைகளில் மழைநீர் வெள்ளம் ஓடியது. மலைகள் சூழ்ந்த பகுதிகளில் வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.மேலும் ஆண்டு முழுவதும் மாதந்தோறும் அவ்வப்போது  மழை பெய்ய வேண்டி தொழில்நுட்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய வானிலை மையத்தின் கிளவுட் சீடிங் பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். வயலும், வயல்  சார்ந்த விவசாய மருதம் நிலங்களில் மாதம் மும்மாரி பொழியட்டும் என்பார்கள். பாலை நிறைந்த இப்பகுதியில் தொடர்ந்து மழை பொழிய வைப்பது என்பது மிக பெரிய சாதனையாகும்.

மூலக்கதை