கடல்களை பாதுகாக்க வலியுறுத்தி செஷல்ஸ் அதிபர் நீருக்கடியில் உரை: உலகில் முதல்முறை

தினகரன்  தினகரன்
கடல்களை பாதுகாக்க வலியுறுத்தி செஷல்ஸ் அதிபர் நீருக்கடியில் உரை: உலகில் முதல்முறை

டெஸ்‌ரோச்சஸ் தீவு: உலக வெப்பமயமாதலில் இருந்து கடல்களை பாதுகாக்க வலியுறுத்தி, செஷல்ஸ் அதிபர் டேனி பவுர், நீர்மூழ்கி கப்பலில் இருந்து நேரலையாக உரையாற்றினார்.கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செஷல்ஸ், 115 தீவுகளை உள்ளடக்கிய தீவு நாடாகும். வெப்பமயமாதல் உலக நாடுகளுக்கு குறிப்பாக தீவு நாடுகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இது குறித்து செஷல்ஸ் அதிபர் டேனி பவுர் அந்நாட்டின் டெஸ்‌ரோச்சஸ் தீவில் `ஓசன் சபையர்’ நீர்மூழ்கி கப்பலில் இருந்து நேரலையாக ஆற்றிய உரையில் உலக மக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுத்தார். அதில், ``உலக வெப்பமயமாதலில் இருந்து `பூமியின் நீல இதயம்’ என்றழைக்கப்படும் கடல்களை பாதுகாக்க வேண்டும். இன்றைய சூழலில் நம் முன் இருக்கும் மிகப்பெரிய சவால் இது. இதற்கு அடுத்த தலைமுறையினர் தீர்வு  காண்பார்கள் என்று விட்டு விட முடியாது. ஏதாவது காரணம் கூறி தப்பித்துக் கொள்ளவோ அல்லது சாக்குபோக்கு சொல்லவோ நமக்கு நேரம் கிடையாது’’ என்று கூறினார்.இந்தியப் பெருங்கடலின் ஆழம் குறித்து ஆய்வு செய்யும் பிரிட்டன் தலைமையிலான அறிவியல் ஆராய்ச்சி மையத்துக்கு சென்ற அவர், அங்கிருந்த நீர்மூழ்கி கப்பலில் இருந்து உரையாற்றினார். நீருக்கடியில் இருந்தபடி  நேரலையாக உரையாற்றியது  உலகில் இதுவே முதல் முறையாகும்.

மூலக்கதை