ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் 7.8 கோடி பேரின் ஆதார் தகவல் திருட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் 7.8 கோடி பேரின் ஆதார் தகவல் திருட்டு

* தெலுங்கு தேசம் கட்சியின்  ‘சேவா மித்ரா’ ஆப்ஸ் மீது புகார்
* ஐதராபாத் ஐடி கிரிட்ஸ் (இந்தியா) நிறுவனம் மீது வழக்கு
* வாக்காளர்களின் தகவல்களும் திருடப்பட்டதால் பரபரப்பு

ஐதராபாத்: ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் 7. 8 கோடி பேரின் ஆதார் தகவல் திருடப்பட்ட புகாரில், தெலுங்கு தேசம் கட்சியின் ‘சேவா மித்ரா’ ஆப்ஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐதராபாத் ஐடி கிரிட்ஸ் (இந்தியா) நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், வாக்காளர்களின் தகவல்களும் திருடப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆந்திர மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில், ஐதராபாத்தைச் சேர்ந்த ஐடி கிரிட்ஸ் (இந்தியா) என்ற நிறுவனம் ஒன்று நியமிக்கப்பட்டது.   அந்த நிறுவனம் மாநிலத்தின் பல்வேறு நலத் திட்ட பயனாளர்களின் ஆதார் எண் உள்பட ஏராளமான அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்காக வடிவமைக்கப்பட்ட ‘சேவா மித்ரா’ என்ற ஆப்ஸ் மூலம் தகவல் திருட்டு நடப்பதாக புகார் எழுந்தது.

இந்த ஆப்ஸ், தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.

மேற்கண்ட ‘சேவா மித்ரா’ ஆப்சுக்கு அரசு சார்பில் நியமிக்கப்பட்ட ஐடி நிறுவனம், விதிமுறைகளை மீறி ஆதார் உள்ளிட்ட தகவல்களை பரிமாற்றம் செய்துள்ளது.

இதுதொடர்பாக, ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர் ஒருவர், தெலங்கானா போலீசில் புகார் கொடுத்தார். காரணம், இந்த நிறுவனம் தெலங்கானா மாநில மக்களின் ஆதார் விபரங்களையும் ‘சேவா மித்ரா’ ஆப்சுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் மார்ச் முதல் வாரத்தில், சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப நிறுவனம் மீது தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அந்த நிறுவனம் ெதாடர்புடைய இடங்களில் தெலங்கானா போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு, சில ஆதாரங்களை சேகரித்து சென்றனர்.

தெலங்கானா மாநில காவல்துறையின் நடவடிக்கையை, ஆந்திர தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம். லோகேஷ் கடுமையாக விமர்சித்தார். அவர், ‘‘ஆந்திர அரசால் பணியமர்த்தப்பட்டுள்ள நிறுவனத்துக்கு, தெலங்கானா காவல்துறையினர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர்.



‘சேவா மித்ரா’ ஆப்ஸ், தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கானது. இந்த விவகாரத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு எதிராக பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் கூட்டாக சதி செய்கின்றனர்’’ என்றார்.


இதனிடையே, இந்த விவகாரத்தில் ஆந்திர அரசு சார்பில் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கை தொடர்பாக அந்த மாநில தலைமை அரசு வழக்குரைஞருடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனையில் ஈடுபட்டுவந்த நிலையில், தற்போது சைபர்பாத் போலீசார், ஆதார் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், ஆந்திர மாநில ஐடி நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், ஆதார் திருட்டு வழக்கை, எஸ்ஐடி போலீசாருக்கு மாற்றி தெலங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, தெலங்கானா சிறப்பு புலனாய்வு வட்டாரங்கள் கூறியதாவது: ஆந்திரா மற்றும் தெலங்கானா மக்களின் 7. 8 கோடி பேரின் ஆதார் தகவல்கள் ‘சேவா மித்ரா’ ஆப்ஸ் மூலம் திருடப்பட்டுள்ளன.

இவை, ஆந்திர அரசு நியமித்த ஐடி நிறுவனம் மூலமே நடந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் 8. 4 கோடி மொத்த மக்கள் தொகையில், 7. 8 கோடி பேரின் தகவல்கள் திருட்டுபோயுள்ளது.

தற்போது, திருடப்பட்ட ஆதார் தகவல்கள் ‘சேவா மித்ரா’ ஆப்சில் இருந்து நீக்கப்பட்டன. ஆதார் சட்டம் மற்றும் தடயவியல் சட்டப்பட்டி அந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தை சோதனையிட்டு ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட முக்கிய உபகரணங்கள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளோம். ‘சேவா மித்ரா’ ஆவணம் மூலம் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள தகவல்களும் திருடப்பட்டு, அவை சர்வரில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

இதுகுறித்து, ஆதார் நிறுவன துணை இயக்குனர் டி. பவானி கூறுகையில், ‘‘போலீசாரின் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆதார் தகவல் திருட்டு மட்டுமல்லாது வாக்காளர் அடையாள அட்டை தகவலும் திருடப்பட்டுள்ளது.

முறைகேடாக ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயரை ஆன்லைனில் நீக்கியுள்ளனர். அதனால், அந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிந்து, தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’’என்றார்.

கடந்த 11ம் தேதி ஆந்திர மாநில மக்களவை, சட்டசபைக்கு வாக்குப்பதிவு நடந்தது போல், ெதலங்கானா மாநிலத்துக்கு மக்களவை வாக்குப்பதிவு நடந்தது. அப்போது, வாக்காளர்கள் பெயர் நீக்கம், ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது, நள்ளிரவு வரை மறுவாக்குப்பதிவு போன்ற பிரச்னைகளால் அங்கு வன்முறை ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பும் நடந்தது.

இந்நிலையில், ஆந்திர அரசு நியமித்த நிறுவனம், வாக்காளர் தகவல்களை திருடுவதற்கு துணை போன விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், இருமாநிலங்களிலும் பரபரப்பு நிலவி வருகிறது.

.

மூலக்கதை