தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது

* அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
* பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் வியூகம்

சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் வியூகம் வகுத்துள்ளது.
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிக்கான தேர்தலும் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக வருகிற 18ம் தேதி நடைபெறுகிறது.

இதில், 39 மக்களவை தொகுதியில் மட்டும் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதேபோன்று 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 269 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இதில், திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையேதான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. டி. டி. வி. தினகரனின் அமமுக கட்சி, நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவையும் களத்தில் உள்ளன.

இந்த கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு, சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக, திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், மக்கள் நீதி மைய ஒருங்கிணைப்பாளர் கமலஹாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திமுக கூட்டணி கட்சிக தலைவர்களான வைகோ, முத்தரசன்,  பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், திருமாவளவன், அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களான ராமதாஸ், பிரேமலதா, ஜி. கே. வாசன் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

மேலும், அகில இந்திய கட்சி தலைவர்களும் தமிழகம் வந்து பிரசாரம் செய்து வருகின்றனர். அதன்படி அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தேனி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.



அதேபோன்று திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சேலம், கிருஷ்ணகிரி, தேனி, மதுரை ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்தார். இந்த நிலையில், தமிழகத்தில் வருகிற 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு முடிவடைவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு பிரசாரம் முடிவடையும். அதன்படி, தமிழகத்தில் நாளை மறுதினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

தேர்தல் பிரசாரம் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ளதால் தமிழகத்தில் தற்போது கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வேட்பாளர்கள், பிரசார வேன்களில் 100க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் வாகனங்களுடன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.



இதற்கிடையே தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர்கள், எங்கேயாவது பணப்பட்டுவாடா நடைபெறுகிறதா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் வரும் பட்சத்தில் உடனடியாக பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடைசி இரண்டு நாட்களில் தான் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படும் என்பதால், இதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் வியூகம் வகுத்துள்ளது.

.

மூலக்கதை