ஒரே நேரத்தில் பிரசாரத்துக்கு அனுமதி காஞ்சி. திமுக எம்எல்ஏ மறியல்: போலீசாருடன் வாக்குவாதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒரே நேரத்தில் பிரசாரத்துக்கு அனுமதி காஞ்சி. திமுக எம்எல்ஏ மறியல்: போலீசாருடன் வாக்குவாதம்

காஞ்சிபுரம்: திமுகவினர் பிரசாரம் செய்யவிருந்த நேரத்தில் அதிமுகவினர் பிரசாரம் செய்வதற்கு அனுமதி கொடுத்ததால் திமுக எம்எல்ஏ மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது காஞ்சிபுரத்தில் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜி. செல்வத்தை ஆதரித்து, முரசொலி அறக்கட்டளை மேலாண்மை இயக்குனரும் நடிகருமான உதயநிதிஸ்டாலின்,  காஞ்சிபுரம்  தேரடி பகுதியில் இன்று காலை 10 மணிக்கு பிரசாரம் செய்ய இருந்தார்.

இதற்காக போலீசாரிடம் முறையாக அனுமதி வாங்கப்பட்டிருந்தது. இதையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தேரடி பகுதியில் திரண்டிருந்தனர்.

திடீரென அதே பகுதியில் அதிமுகவினரும் குவிந்தனர். இதுபற்றி கேட்டபோது அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து,  துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் காஞ்சிபுரம் பஸ் நிலைய பகுதியில்  பிரசாரம்  செய்ய இருப்பதாக தெரிவித்தனர்.

திமுக பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட  தேரடி பகுதியில் அதிமுகவினருக்கும் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட காரணத்தால் அதிமுகவினர் குவிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

அப்போது அங்கு திரண்ட கட்சியினர், ‘’ஒரே நேரத்தில் ஒரே இடத்தில்  பிரசாரம் செய்ய எதற்கு அனுமதி வழங்கினீர்கள்’’ என்று போலீசாரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   வக்கீல் எழிரசன் எம்எல்ஏ தலைமையில், திடீரென  சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் டிஎஸ்பி பாலசுப்பிரமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருப்பினும் திமுகவினர் அங்கே அமர்ந்திருந்தனர். இதன் காரணமாக மேலும் பரபரப்பு அதிகரித்தது.

போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

.

மூலக்கதை