‘புரட்சி புயல்’ கபில் | ஏப்ரல் 13, 2019

தினமலர்  தினமலர்
‘புரட்சி புயல்’ கபில் | ஏப்ரல் 13, 2019

மூன்றாவது உலக கோப்பை தொடர் 1983ல் இங்கிலாந்தில் நடந்தது. இம்முறை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ‘கபில் டெவில்ஸ்' என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு எழுச்சி கண்டது. இத்தொடரிலும் 8 அணிகள் பங்கேற்றன. கனடாவுக்கு பதில் ஜிம்பாப்வே அறிமுக அணியாக கலந்து கொண்டது. அதே 60 ஓவர்கள், சிவப்பு பந்து போன்றவை பயன்படுத்தப்பட்டன. அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. இம்முறை லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் இரண்டு முறை மோத வேண்டும் என்பது மட்டும் புதிய விஷயம்.

கபில் 175 ரன்: லீக் சுற்றில் அதிர்ச்சி முடிவுகளுக்கு பஞ்சமில்லை. முதல் லீக் போட்டியில் ‘கத்துக்குட்டி' ஜிம்பாப்வேயிடம், ஆஸ்திரேலியா வீழ்ந்தது. பின் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்து தத்தளித்தது. இந்த நேரத்தில் களமிறங்கிய கேப்டன் கபில்தேவ் தனிநபராக போராடி 175 ரன்கள் எடுத்து, அணிக்கு வெற்றி தேடி தந்தார்.

இந்தியா சாம்பியன்: பரபரப்பான பைனலில்(25.6.1983) இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில், இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் தான் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது. இதற்கேற்ப, முதலில் பேட் செய்த இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் நிலைகுலைந்தது. ராபர்ட்ஸ், மார்ஷல், ஜோயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங் உள்ளிட்ட ‘வேகங்கள்' போட்டுத் தாக்க, இந்திய அணி 54.4 ஓவரில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்ரீகாந்த் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார்.

பின் சுலப இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நம்மவர்கள் "ஷாக்' கொடுத்தனர். கிரீனிட்ஜ்(1), ஹெய்ன்ஸ்(13) விரைவில் வெளியேறினர். அடுத்து மதன் லால் வீசிய பந்தை ‘ஆபத்தான' ரிச்சர்ட்ஸ் (33) தூக்கி அடிக்க, அதனை சுமார் 60 அடி தூரம் ஓடிச் சென்று பிடித்த கபில்தேவ், அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 52 ஓவரில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 43 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றி, வரலாறு படைத்தது. மூன்று விக்கெட் வீழ்த்திய மொகிந்தர் அமர்நாத் "ஆட்ட நாயகன்' விருதை பெற்றார். இம்முறையும் தொடர் நாயகன் விருது வழங்கப்படவில்லை.

தெரியுமா

சேட்டன் ‘ஹாட்ரிக்'

உலக கோப்பை வரலாற்றில் ‘ஹாட்ரிக்' சாதனை படைத்த முதல் வீரர் இந்தியாவின் சேட்டன் சர்மா. கடந்த 1987ல் நாக்பூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் "வேகத்தில்' மிரட்டிய இவர், தொடர்ந்து மூன்று பந்துகளில் கென் ரூதர்போர்டு, இயன் ஸ்மித், ஈவன் சாட்பீல்டை போல்டாக்கினார். இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

மூலக்கதை