பட்டையை கிளப்பிய பட்லர்: ராஜஸ்தான் அசத்தல் வெற்றி | ஏப்ரல் 13, 2019

தினமலர்  தினமலர்
பட்டையை கிளப்பிய பட்லர்: ராஜஸ்தான் அசத்தல் வெற்றி | ஏப்ரல் 13, 2019

மும்பை: பிரிமியர் லீக் போட்டியில் பட்லர் 89 ரன்கள் விளாச, ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியில் ஸ்டோக்ஸ் (காயம்), ரியான் நீக்கப்பட்டு லியாம் லிவிங்ஸ்டன், கிருஷ்ணப்பா கவுதம் வாய்ப்பு பெற்றனர். மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் திரும்பியதால், சித்தேஷ் நீக்கப்பட்டார்.

குயின்டன் அரை சதம்

மும்பை அணிக்கு குயின்டன், கேப்டன் ரோகித் ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் தந்தது. கவுதம் வீசிய மூன்றாவது ஓவரில் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். குல்கர்னி பந்துவீச்சில் ரோகித் மூன்று பவுண்டரி விளாசினார். ஆர்ச்சர் பந்தில் ரோகித் (47) அவுட்டானார். குயின்டன் அரை சதம் எட்டினார். சூர்யகுமார் (16) போலார்டு (6) ஏமாற்றினர். உனத்கட் வீசிய கடைசி ஹர்திக் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்தது. ஹர்திக் (28), குர்னால் (0) அவுட்டாகாமல் இருந்தனர். ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆர்ச்சர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பட்லர் மிரட்டல்

ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் ரகானே, பட்லர் ஜோடி அசத்தியது.  குர்னால் ‘சுழலில்’ ரகானே (37) ஆட்டமிழந்தார். பின் பட்லர்– சாம்சன் ஜோடி எதிரணி பந்துவீச்சை சிதறடித்தது. அல்ஜாரி ஜோசப் வீசிய 13வது ஓவரை குறி வைத்து தாக்கினார் பட்லர். இதில் 6,4,4,4,4,6 என விளாசி 28 ரன்கள் குவித்தார். ராகுல் சகார் ‘சுழலில்’ பட்லர் (89) அவுட்டானார்.

கோபால் கலக்கல்

பும்ரா ‘வேகத்தில்’ சாம்சன் (31) சிக்கினார். குர்னால் ‘சுழலில்’ லிவிங்ஸ்டன் (1), ஸ்மித் (12) சரணடைந்தனர். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில்,  ஸ்ரேயாஸ் கோபால் பவுண்டரி அடித்து கைகொடுக்க, ராஜஸ்தான் அணி 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோபால் (13), கவுதம் (0) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை சார்பில் அதிகபட்சமாக குர்னால் 3 விக்கெட் வீழ்த்தினார்.

மூலக்கதை