தோனிக்கு தடை: சேவக் ஆவேசம் | ஏப்ரல் 13, 2019

தினமலர்  தினமலர்
தோனிக்கு தடை: சேவக் ஆவேசம் | ஏப்ரல் 13, 2019

ஜெய்ப்பூர்: ‘‘அம்பயர்களிடம் வாக்குவாதம் செய்த சென்னை அணி கேப்டன் தோனிக்கு, இரண்டு போட்டியில் விளையாட தடை விதிக்க வேண்டும்,’’ என, முன்னாள் இந்திய துவக்க வீரர் சேவக் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த பிரிமியர் தொடருக்கான லீக் போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி 3 பந்தில் 8 ரன் தேவைப்பட்டன. ஸ்டோக்ஸ் வீசிய 4வது பந்து சான்ட்னர் இடுப்பு உயரத்துக்கு மேலே செல்ல, அம்பயர் காந்தே (இந்தியா) ‘நோ பால்’ என்றார். இதில் 2 ரன் எடுக்கப்பட்டன. ஆனால் பேட்ஸ்மேன் அருகில் நிற்கும் ‘லெக்’ அம்பயர் ஆக்சன்போர்டு (ஆஸி.,), இதை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கேப்டன் தோனி, உடனே மைதானத்துக்குள் புகுந்து கோபத்துடன் அம்பயர்களிடம் விவாதம் செய்தார்.

இப்படி விதிகளை மீறி மைதானத்துக்குள் சென்று அம்பயரிடம் வாக்குவாதம் செய்த தோனிக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தவிர, பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பின.

இதுகுறித்து முன்னாள் இந்திய துவக்க வீரர் சேவக் கூறுகையில் ‘‘ஒரு அணியின் கேப்டன் போட்டிக்கான விதிகளை மீறுவது தவறு. இதற்காக தோனிக்கு ஒன்று அல்லது இரண்டு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இச்சம்பவம் மற்ற அணி கேப்டன் அல்லது வீரர்களுக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும்,’’ என்றார்.

கங்குலி ஆதரவு

முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘‘சென்னை அணி கேப்டன் தோனி, அம்பயரிடம் வாக்குவாதம் செய்ததில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அணியின் வெற்றிக்காக இப்படி செய்திருப்பார். அவரும் மனிதர் தானே,’’ என்றார்.

மூலக்கதை