சென்னைக்கு இனிக்குமா ஈடன்: இன்று கோல்கட்டாவுடன் மோதல் | ஏப்ரல் 13, 2019

தினமலர்  தினமலர்
சென்னைக்கு இனிக்குமா ஈடன்: இன்று கோல்கட்டாவுடன் மோதல் | ஏப்ரல் 13, 2019

கோல்கட்டா: பிரிமியர் தொடரில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணி தனது வெற்றி நடையை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பிரிமியர் கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் தற்போது நடக்கிறது. கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் இன்று நடப்பு சாம்பியன், தோனியின் சென்னை அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கோல்கட்டாவை எதிர்கொள்கிறது.

சென்னை அணி களமிறங்கிய 7 போட்டிகளில் 6ல் வென்றுள்ளது. மீதமுள்ள 7 போட்டிகளில் 2ல் வென்றால் கூட ‘பிளே ஆப்’ உறுதியாகலாம். இருப்பினும் அணியின் துவக்க வீரர் வாட்சனின் (7ல் 105 ரன்) மோசமான ‘பார்ம்’ தொடர்வதால் இன்று இடம் பிடிப்பது சிரமம் தான். டுபிளசி, அடுத்து வரும் ரெய்னா, கேதர் ஜாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், பின் வரும் வீரர்களுக்கு சிரமம் அதிகம் இருக்காது.

தோனி எப்படி

கேப்டன் தோனியை பொறுத்தவரையில் முதன் முறையாக, களத்தில் அம்பயர்களுடன் விவாதம் செய்து அதிருப்தியை சம்பாதித்துள்ளார். இன்று சற்று ‘கூல்’ ஆக நடந்து கொள்ளலாம். அடுத்து வரும் அம்பதி ராயுடு, அரைசதம் அடித்து ‘பார்மிற்கு’ திரும்பியது நல்ல விஷயம் தான்.

ஜடேஜாவுடன் இணைந்து கடந்த போட்டியில் சிக்சர் அடித்து வெற்றி பெற்றுத் தந்த சான்ட்னர் மீண்டும் இடம் பிடித்தால், ஹர்பஜனுக்கு சிக்கல் தான்.

சகார் நம்பிக்கை

சென்னை அணிக்கு துவக்கம் மற்றும் கடைசி கட்ட ஓவர்களில் நம்பத்தகுந்த பவுலராக மாறியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சகார் (7ல் 10 விக்.,). இவருடன் இணைந்த ஷர்துல் தாகூர், அப்படியே நேர் எதிராக ரன்களை வாரி வழங்குகிறார். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் இம்ரான் தாகிர் (9 விக்.,) கைகொடுக்கிறார். தவிர ஜடேஜா (7), ஹர்பஜ்ன சிங் (7), சான்ட்னர் (1) என பலர் உள்ளது பெரும் பலம் தான்.

ரசல் சந்தேகம்

கோல்கட்டா அணி 7ல் 4 வெற்றி பெற்றது. இதில் மூன்று முறை ஆட்டநாயகன் ஆனவர் ஆன்ட்ரி ரசல். ஆறு முறை 40 ரன்னுக்கும் மேல் எடுத்த இவர் மணிக்கட்டு காயத்தால் அவதிப்படுகிறார். இதனால் ரசல் இன்று களமிறங்குவது சந்தேகம் தான்.

வெற்றிக்கு ரசல் வருகையை பெரிதும் நம்பியுள்ள கோல்கட்டாவுக்கு, சுப்மன் கில் (65 ரன், 39 பந்து) டில்லிக்கு எதிராக விளாசியது நம்பிக்கை தந்துள்ளது. அதேநேரம் கடந்த சீசனில் கோல்கட்டா அணிக்கு அதிக ரன்கள் எடுத்த கேப்டன் தினேஷ் கார்த்திக் இம்முறை 7 போட்டியில் 93 ரன் மட்டும் எடுத்துள்ளது பெரிதும் பாதிப்பு தருகிறது. உத்தப்பா, ராணா சற்று ஆறுதல் தருகின்றனர்.

பவுலிங்கில் ஆன்ட்ரி ரசல் இதுவரை அதிகபட்சம் 6 விக்கெட் சாய்த்தார். மற்றபடி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரைன் (3 விக்.,), பியுஸ் சாவ்லா (4 விக்.,), குல்தீப் (3 விக்.,) இணைந்த ‘சுழல்’ கூட்டணி பெரிதும் ஏமாற்றுகிறது.

சொந்தமண்ணில் வெற்றிக்கு திரும்ப முயற்சிக்கும் கோல்கட்டா அணிக்கு, சென்னை அணி தடை போடும் பட்சத்தில், இத்தொடரில் இரண்டாவது முறையாக கோல்கட்டாவை வீழ்த்தலாம்.

12

சென்னை, கோல்கட்டா அணிகள் பிரிமியர் அரங்கில் இதுவரை 20 முறை மோதின. இதில் சென்னை 12ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. கோல்கட்டா 7ல் வென்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

* ஈடன் கார்டனில் நடந்த 8 போட்டிகளில் இரு அணிகளும் தலா 4ல் வெற்றி பெற்றன.

தவான் மிரட்டல் தொடருமா

ஐதராபாத்தில் இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் டில்லி, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. பெயர் மாற்றத்துக்குப் பின் டில்லி அணி (7ல் 4 வெற்றி) சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த போட்டியில் கோல்கட்டாவை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. சதம் அடிக்கவில்லை என்றாலும் 97 ரன் எடுத்த நம்பிக்கையில் உள்ள தவான், ரிஷாப் பன்ட், பிரித்வி ஷா, இஷாந்த் சர்மா, வேகப்புயல் ரபாடா (13 விக்.,) மீண்டும்  உதவலாம்.

ஐதராபாத் அணி 6ல் 3 வெற்றி, 3 தோல்வி பெற்றது. துவக்க ஜோடி வார்னர், பேர்ஸ்டோவ், விஜய் சங்கர் பேட்டிங்கில் உதவலாம். பவுலிங்கில் ரஷித் கான், முகமது நபி, கேப்டன் புவனேஷ்வர் வெற்றிக்கு கைகொடுக்கலாம்.

 

மூலக்கதை