சரியான அணுகுமுறையுடன் வந்தால் டிரம்புடன் 3வது சுற்று பேச்சுவார்த்தைக்கு தயார்: வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
சரியான அணுகுமுறையுடன் வந்தால் டிரம்புடன் 3வது சுற்று பேச்சுவார்த்தைக்கு தயார்: வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் அறிவிப்பு

சியோல்: ‘‘சரியான அணுகுமுறையுடன் வந்தால் அமெரிக்க அதிபர் டிரம்புடன் 3வது சுற்று பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன்’’ என வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் அறிவித்துள்ளார். அடிக்கடி அணுகுண்டு சோதனைகள் நடத்தி வந்ததால் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்நிலையில், அமெரிக்கா - வடகொரியா இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் இடையே நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவேன் என கிம் உறுதியளித்தார். இதன்படி வடகொரியா அணு ஆயுத தயாரிப்பை கைவிட்டது. இதையடுத்து, தங்கள் மீதான பொருளாதர தடை நீக்கப்படும் என கிம் எதிர்பார்த்த நிலையில், அணு ஆயுத தயாரிப்பு முற்றிலும் கைவிடப்படாத நிலையில் பொருளாதார தடையை நீக்க முடியாது என டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.இதையடுத்து, 2வது முறையாக இரு தலைவர்களும் வியட்நாமில் கடந்த பிப்ரவரி மாதம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது, எந்த ஒப்பந்தமும் கையெழுத்து ஆகாத நிலையில் சந்திப்பு முடிவுக்கு வந்தது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்தார். இதையொட்டி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜங் உன்னுடன் 3வது சுற்று பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நேற்று, சரியான அணுகுமுறையுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தால் டிரம்புடன் 3 சுற்று பேச்சு நடத்த விரும்புவதாக வடகொரிய அதிபர் கிம் தெரிவித்துள்ளார். கிம் கூறுகையில், ‘‘இந்த பேச்சுவார்த்தைக்காக இந்த ஆண்டு இறுதி வரை காத்திருக்க போகிறேன். அதற்குள் டிரம்ப் துணிச்சலான முடிவு எடுப்பார் என நம்புகிறேன்’’ என்றார்.

மூலக்கதை