ஜனாதிபதி மாளிகைக்கு அடுத்தடுத்த புகார்கள் ராணுவத்தை மையப்படுத்தி வைரலாகும் போலி கடிதங்கள்: பாஜ - காங்கிரஸ் கட்சிகள் பரஸ்பர குற்றச்சாட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜனாதிபதி மாளிகைக்கு அடுத்தடுத்த புகார்கள் ராணுவத்தை மையப்படுத்தி வைரலாகும் போலி கடிதங்கள்: பாஜ  காங்கிரஸ் கட்சிகள் பரஸ்பர குற்றச்சாட்டு

டெல்லி: ‘இந்திய ராணுவத்தை அரசியல் லாபத்துக்கு அரசியல்வாதிகள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 150 முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். இந்த கடிதம் எழுதியதில் முன்னாள் ராணுவத் தளபதி எஸ். எப் ரோட்ரிக்ஸ், சங்கர்ராய் சவுத்ரி, ஜெனரல் தீபக் கபூர், விமானப்படை தளபதி என். சி.

சூரி. கப்பற்படை முன்னாள் தளபதி லக்ஷ்மிநாராயண் ராம்தாஸ், விஷ்ணு பகவத், அட்மிரல் அருண்பிரகாஷ், அட்மிரல் சுரேஷ் மேத்தா ஆகியோர் முக்கியமானவர்கள் என்று கூறப்பட்டது.

இதனிடையே, ‘முன்னாள் ராணுவ அதிகாரிகள் தொடர்பாக கடிதம் எதுவும் குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு வரவில்லை’ என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, முன்னாள் ராணுவ அதிகாரிகளின் பெயர், தகுதி ஆகிய விபரங்களுடன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் நகல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், ‘எந்தக் கடிதமும் ஜனாதிபதிக்கு எழுதவில்லை’ என்று முன்னாள் ராணுவ அதிகாரிகள் ரோட்ரிக்ஸ், என். சி. சூரி ஆகியோர் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து ரோட்ரிக்ஸ் கூறும்போது, ‘‘நான் இந்தக் கடிதத்தை எழுதவே இல்லை. என்னை இணைத்து கடிதம் எப்படி வெளியானது என்பது புதிராக உள்ளது.

42 ஆண்டுகள் நான் ராணுவத்தில் இருந்தவரை எவ்வித அரசியல் சார்பும் என் தரப்பில் இல்லை. இப்போதும் அப்படியே இருக்கிறேன்” என்றார்.

மேலும், என். சி. சூரி கூறும்போது, “இந்த விவகாரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதில் எழுதிய விஷயங்களை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

நான் எந்தக் கடிதமும் எழுதவில்லை” என்றார்.
இதுகுறித்து, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறும்போது, “கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி, பாஜ தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் பிரசாரக் கூட்டங்களில் பேசும்போது, ‘புல்வாமா தாக்குதலுக்கு பாலகோட் தாக்குதல் மூலம் நாங்கள்தான் பதிலடி கொடுத்தோம்’ என்று ரீதியில் பேசி வருகின்றனர். ராணுவ வீரர்களின் தியாகத்தை நாங்கள் மதிக்கிறோம்.

ஆனால் அரசியல் லாபத்துக்காக பாஜ அதை பயன்படுத்தக்கூடாது” என்றார். ராணுவத்தின் பெயரை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவதாக எழுதப்பட்ட போலி கடிதம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, “போலி கடிதங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவது வருத்தம் அளிக்கிறது.

இது கண்டிக்கத்தக்கது” என்றார்.

.

மூலக்கதை