மத்திய அமைச்சர் ஸ்மிருதியின் மனுவில் சர்ச்சை.... ஆமாங்க... நான் பட்டப்படிப்பு படிக்கல...!

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய அமைச்சர் ஸ்மிருதியின் மனுவில் சர்ச்சை.... ஆமாங்க... நான் பட்டப்படிப்பு படிக்கல...!

மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வேட்பாளருமான ராகுல் காந்தியை எதிர்த்து பாஜ சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் நேற்று தேர்தலில் வெற்றி பெற வேண்டி, தனது கணவர் சுபீன் இரானியுடன் இணைந்து சிறப்பு யாக பூஜை நடத்தினர்.

அதன்பின் வேட்பு மனு தாக்கல் செய்ய அமேதி தொகுதியை அடைந்த ஸ்மிருதி இரானி, பாஜ தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்டார்.
வாகனத்தில் சென்ற அவருக்கு வழிநெடுக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

இந்த ஊர்வலம் தேர்தல் அலுவலகத்தில் நிறைவடைந்ததும் ஸ்மிருதி இரானி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உடனிருந்தார்.

இந்நிலையில், அமேதி தேர்தல் அதிகாரியிடம் ஸ்மிருதி இரானி தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறிய விபரங்கள் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளன. அதனால், அவரது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படுமா? அல்லது தள்ளுபடி செய்யப்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



முன்னதாக கடந்த 2014ம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் ஸ்மிருதி இரானி தனது வேட்புமனு தாக்கலில், 1996ம் ஆண்டு டில்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தாக தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வழக்கு ஒன்று தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்க தள்ளுபடியானது.

ஆனால், தற்போது டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஸ்மிருதியின் கல்வி சான்றிதழ் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இவர், அமேதி தொகுதியில் தோல்வியை தழுவிய நிலையில், அவருக்கு 2014ல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது. ‘பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த ஸ்மிருதி, கல்வித்துறை அமைச்சரா?’ என்று சர்ச்சைகள் கிளம்பின.

இதற்கிடையில் டெல்லி பல்கலைக்கழகத்திலிருந்து ஸ்மிருதி இரானியின் கல்வி சான்றிதழ்கள் சிலவற்றைப் பத்திரிகை ஒன்று வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது. இதனை கசிய விட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த ஸ்மிருதி இரானி தனது வேட்புமனுவில் தமக்கு ரூ.

4. 71 கோடி சொத்து இருப்பதாகவும், அதில் அசையும் சொத்து ரூ. 1. 75 கோடியும், அசையா சொத்து ரூ. 2. 96 கோடியும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எவ்வித வழக்கும் இல்லை; எவ்வித கடனும் இல்லை; கணவரின் சொத்து ரூ. 1. 69 கோடி என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 1991 முதல் 1993ம் ஆண்டு காலகட்டங்களில் பள்ளி படிப்பு முடித்திருப்பதாகவும், பட்டப்படிப்பினை கடந்த 1994ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் (பார்ட் 1) மட்டுமே முடித்திருப்பதாகவும், முழுமையாக டிகிரி பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை வேட்பு மனுவில் தவறான தகவல் கொடுத்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நேற்று ஸ்மிருதி தாக்கல் செய்த கல்வித் தகுதி குறித்த தகவல் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.   அதனால், 5ம் கட்டமாக வருகிற மே 6ம் தேதி நடக்கும் வாக்குப்பதிவுக்கு முன்னதாக, ஸ்மிருதியின் வேட்பு மனு வருகிற 20ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது எடுத்துக் கொள்ளப்படும். அப்போது, அவரது மனு ஏற்றுக் கொள்ளப்படுமா அல்லது தள்ளுபடி செய்யப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.


.

மூலக்கதை