குடிமைப் பணித் தேர்வில் தமிழை விருப்பப்பாடமாக எடுத்து வென்று சாதித்த விழுப்புரம் மாணவி சித்ரா!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
குடிமைப் பணித் தேர்வில் தமிழை விருப்பப்பாடமாக எடுத்து வென்று சாதித்த விழுப்புரம் மாணவி சித்ரா!

இந்திய குடிமைப் பணித் தேர்வில் தமிழை விருப்பப்பாடமாக எடுத்து வெற்றி பெற்று  விழுப்புரம் மாணவி சித்ரா சாதனை படைத்துள்ளார்.

இந்திய குடிமைப்பணித் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில், விழுப்புரம் காந்தி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் தியாகராஜனின் மகள் சித்ரா தேர்ச்சி பெற்றார்.

தமிழை விருப்பப்பாடமாக எடுத்து வென்றது குறித்து சித்ரா கூறியதாவது:

குடிமைப் பணித் தேர்வில் இந்திய அளவில் 296-ஆவது இடத்தில் தேர்வாகி இருக்கிறேன். தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற 35 பேரில் நானும் ஒருவர்.

பொறியியல் பிடெக்.கில் ஐ.டி. முடித்திருந்த நான், பெங்களூருவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். வேலைக்குச் சென்றபடியே குடிமைப் பணித் தேர்வுக்காக, தமிழ் மொழியை விருப்பப் பாடமாக எடுத்து முனைப்பொடு படித்தேன். கடந்த 2013 முதல் தொடர்ச்சியாக 6 முறை இந்தத் தேர்வில் பங்கேற்று, கடைசி வாய்ப்பாக தற்போதுதான் தேர்ச்சி பெற்றுள்ளேன். தமிழை விருப்பமாக எடுத்து, தேர்ச்சி பெற்ற 4 பேரில் நானும் ஒருவர். இந்தத் தேர்வுக்காக, சென்னையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்தேன். 

மயிலம் தமிழ்க் கல்லூரி பேராசிரியர் லட்சாராமன் எனக்கு வழிகாட்டியாக இருந்தார். கடந்த ஜூன் 2018-இல் புதுவையில் முதல் நிலைத் தேர்வு எழுதினேன். 

கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். புதுதில்லியில் நேர்முகத் தேர்வு பிப்ரவரியில் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி.
தரவரிசை அடிப்படையில் பணி ஒதுக்கீடு கிடைக்கும். எனக்குக் கிடைக்கும் பணியை ஏற்று சிறப்பாகச் செயல்படுவேன்.  தோல்வியை பொருட்டாகக் கருதாமல், தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு நானே ஓர் உதாரணம். தாய்மொழிக் கல்வி வீண் போகாது. எந்த மொழியாக இருந்தாலும், அதில் புலமையோடு இருந்தால் தேர்ச்சி சாத்தியம்.
இவ்வாறு சித்ரா கூறினார்.

தமிழை விருப்பப் பாடமாக எடுத்து குடிமைப்பணித்தேர்வில் வென்ற சித்ராவை வலைத்தமிழ் வாழ்த்துகின்றது.

மூலக்கதை