17வது மக்களவைக்கான ஜனநாயக திருவிழா... முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
17வது மக்களவைக்கான ஜனநாயக திருவிழா... முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு

* 91 எம்பி தொகுதியுடன் 4 மாநில சட்டசபைக்கும் தேர்தல்
* வாக்குரிமையை நிறைவேற்றும் 14 கோடி வாக்காளர்கள்

புதுடெல்லி : நாட்டின் 17வது மக்களவைக்கான ஜனநாயக திருவிழா முதற்கட்ட வாக்குப்பதிவுடன் விறுவிறுப்பாக தொடங்கியது. இதில், 18 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 எம்பி தொகுதியுடன் 4 மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடப்பதால், இன்றைய தினம் 14 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை நிலைநாட்டி வருகின்றனர்.   நாட்டின் 17வது மக்களவைத் தேர்தலில் முதற்கட்டமாக 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கியது.

ஆந்திர மாநிலத்தில் 25 தொகுதிகள், அருணாசலப் பிரதேசம் 2, அசாம் மாநிலத்தில் 5, பீகாரில் 4, சட்டீஸ்கரில் 1, ஜம்மு-காஷ்மீரில் 2, மகாராஷ்டிராவில் 7, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத்தீவு ஆகியவற்றில் தலா 1, மேகாலயாவில் 2, ஒடிசாவில் 4, உத்தரப்பிரதேசத்தில் 8, உத்தரகாண்டில் 5, மேற்குவங்கத்தில் 2 தொகுதிகள் என 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றிலுள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த முதல்கட்டத் தேர்தலில் 14 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரைத் தேர்தல் நடைபெறும் 25 மக்களவைத் தொகுதிகளில் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதேபோல், மொத்தமுள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,118 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

குப்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், புலிவெந்துலா தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தங்களது வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வந்து காலையிலேயே வாக்களித்தனர்.



ஒடிசா மாநிலத்தில் 4 மக்களவைத் தொகுதிகள், 147 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நக்சலைட் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள தொகுதிகள் என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

சிக்கிம் மாநிலத்தில் 1 மக்களவைத் தொகுதியுடன், மொத்தமுள்ள 32 சட்டசபை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. பேரவைத் தேர்தலில் முதல்வர் சாம்லிங், முன்னாள் கால்பந்து வீரர் புட்டியா ஆகியோர் முக்கியமானவர்கள்.

120 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு மத்திய துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அருணாசலப் பிரதேச 2 மக்களவை தொகுதியுடன், 60 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலும் நடக்கிறது. இதில், 11 பெண்கள் உட்பட 181 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


தேர்தல் அமைதியாக நடைபெறத் தேர்தல் கமிஷன் அனைத்து வகையான முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் தேர்தலில் அதிகளவு வாக்குப்பதிவை உறுதிப்படுத்தத் தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னதாக நடத்தப்பட்டதால், அப்பகுதிமக்கள் அதிகாலை முதலே வாக்கு சாவடிகளுக்கு வரத்தொடங்கினர்.

ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு வரவேற்பு

மேகாலயாவில் தேர்தல் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையில் நடந்து வருகிறது. மலைப்பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் அதிகாலையிலேயே வாக்களிக்க வந்திருந்தனர்.

இன்று காலையிலேயே மழை பெய்த காரணத்தால், வாக்காளர்கள் வருவதும் சற்று குறைந்து இருந்தது. சரியாக காலை 7 மணிக்கு வந்து அங்கு வாக்களித்த வாக்காளர்களுக்குச் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

மேற்கு காசி கில்ஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அதிகாலையிலேயே சென்று முதலில் வாக்களித்த 5 வாக்காளர்களுக்குப் பதக்கம் வழங்கப்பட்டது. வாக்காளர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியதால் வாக்காளர்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

அதேபோல், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பக்பட் தொகுதியின் பரவுட் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரும் வாக்காளர்களை வரவேற்கும் விதமாக அவர்கள் மீது அதிகாரிகள் பூக்களைத் தூவினர். டிரம்ஸ் அடித்தும் வரவேற்பு அளித்தனர்.

இதனை கண்டு ஆச்சர்யமடைந்து மகிழ்ந்த மக்கள் ஆர்வமுடன் சென்று வாக்களித்தனர். வாக்காளர்கள் மீது பூக்களை தூவி வரவேற்ற செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாக்காளர்களுக்கு வேண்டுகோள்

முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், ‘17வது மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று தொடங்கிவிட்டது.

முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அனைவரும் திரளாக வந்து வாக்களியுங்கள். இளம் மற்றும் முதல் தலைமுறையினர் அதிக எண்ணிக்கையில் தவறாது வாக்களித்து சாதனை படைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேபோல், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ‘வடகிழக்குப் பகுதிகளில் அமைதி தொடர வேண்டும் என்றால், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா மாநில சகோதர, சகோதரிகள் தவறாமல் வாக்களியுங்கள். இன்றைய ஜனநாயக திருவிழாவில் அனைவரும் பங்கேற்று வாக்களிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ‘இந்தியாவின் எதிர்காலத்துக்காக வாக்களியுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

.

மூலக்கதை