எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து ரெய்டு... ரெய்டு... ரெய்டு...! புலனாய்வு அமைப்புகள் நடுநிலையாக செயல்படுகின்றனவா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து ரெய்டு... ரெய்டு... ரெய்டு...! புலனாய்வு அமைப்புகள் நடுநிலையாக செயல்படுகின்றனவா?

இன்று முதற்கட்ட தேர்தல் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து வருமான வரித்துறை சார்பில் நடத்தப்படும் சோதனைகள் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளும் பாஜ அரசு, தொடர்ந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீது வருமான வரித்துறையை ஏவிவிடுவதால், எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

இதுகுறித்து, தேர்தல் ஆணையத்தில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால், ‘தேர்தல் நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நடுநிலையாகவும், பாரபட்சமின்றியும் இருக்க வேண்டும்’ என்று கடந்த சில நாட்களுக்கு முன், மத்திய நிதி அமைச்சகத்தைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

மேலும், எதிர்க்கட்சிகள் மீது ஏவப்படும் சோதனைகள் தொடர்பாக, மத்திய வருமான வரித்துறையை நிர்வகிக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பி. சி. மோடிக்கும், வருவாய் செயலாளர் ஏ. பி. பாண்டேவுக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தேர்தல் ஆணையம் ஒருபக்கம் மத்திய வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்புவது நடந்தாலும், பொதுமக்கள் மத்தியில் வருமான வரித்துறை சோதனைகள் ஒருதலைபட்சமாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, கடந்த 6 மாதங்களில் எதிர்க்கட்சி தலைவர்கள் வீடுகள் அவர்களுக்குச் சொந்தமான இடங்கள் என 15 இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகளைப் பட்டியலிட்டால், 2016 - 17ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 2,126 வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு 89 பேருக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 2016ம் ஆண்டில் 447 சோதனைகள், 2017ம் ஆண்டில் 1,152 சோதனைகள், 2018ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை 527 சோதனைகள் நடத்தப்பட்டு, 100க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மற்றும் பலமாக எதிர்க்கட்சிகள் உள்ள மாநிலங்களில் சோதனைகள் அதிகளவில் நடத்தப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, கர்நாடகாவில் 5, தமிழகத்தில் 3, ஆந்திராவில் 2, டெல்லியில் 2 , மத்திய பிரதேசம் 1, ஜம்மு - காஷ்மீர் 1, உத்தரப்பிரதேசம் 1, உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜ தலைவர் ஒருவர் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.

இதில், உத்தரகாண்ட் தலைவர் வீட்டில் நடத்தப்பட்ட தகவல்கள் உடனடியாக வெளியே வரவில்லை. அந்த தலைவரையும் கட்சியிலிருந்து பாஜ நீக்கிவிட்டது என்ற தகவலும் வெளியானது.



மக்களவை தேர்தல் அறிவித்த பின்னர், கடந்த சில தினங்களுக்கு முன் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின், இந்தூரிலிலுள்ள முன்னாள் உதவியாளர் பிரவீன் காக்கர் மற்றும் டெல்லியிலுள்ள கமல்நாத்தின் முன்னாள் ஆலோசகர் ராஜேந்திர குமார், கமல்நாத் உதவியாளர் ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் 3 நாட்களாக சோதனைகள் நடத்தினர். அதில், கணக்கில் வராத பணம், முறைகேடான பணப்பரிமாற்றம் போன்ற பிரிவுகளில் வழக்குகளும் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் மற்றும் மிட்குர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சுதாகர் யாதவ் மற்றும் தெலுங்கு தேசத் தலைவரும் தொழிலதிபருமான சி. எம். ரமேஷ் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. அதேபோல் கடந்த மார்ச் 27 மற்றும் 28ம் தேதிகளில் கர்நாடக மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் போட்டியிடும் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியின் உதவியாளர் வீடு, பொதுப் பணித்துறை அமைச்சர் எச். டி. ரேவண்ணாவின் நண்பர்கள், நீர்ப்பாசன துறை அமைச்சர் சி. எஸ். புட்டராஜூ வீடு ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தியது போல், தமிழகத்திலும் சில இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தியது.



கடந்த 6 மாதத்திற்கு முன்பு டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கைலாஷ் காஹ்லோட் மற்றும் நரேஷ் பாலன் ஆகியோரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கடந்த மாதம், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் மாயாவதியின் முன்னாள் செயலாளர் நெட் ராம் வீட்டில் சோதனை நடந்தது.

வருமான வரித்துறையினரின் இந்த சோதனையை அமைச்சர்கள் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதுதொடர்பாக, கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது டுவிட்டர் பதிவில், ‘வருமான வரிச்சோதனையின் மூலம் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை பிரதமர் மோடி திறந்துவிட்டுள்ளார்.

மோடியின் பழிவாங்கும் நடவடிக்கையைச் செயல்படுத்துவதற்குக் கர்நாடக வருமானத் துறைத் தலைவர் பாலகிருஷ்ணாவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளது. தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளைச் சங்கடப்படுத்த ஊழல் அதிகாரிகள் பயன்படுகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.

இவரைப் போலவே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், வருமான வரித்துறை சோதனைக்கு எதிராகத் தனது கருத்தைப் பதிவு செய்தது மட்டுமல்லாது, தர்ணா போராட்டங்களையும் நடத்தினார். எதிர்க்கட்சிகளை குறிவைத்து வருமான வரித்துறையைக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் கூறுகையில், ‘‘பாஜ அரசின் நடவடிக்கைகளைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

எதையும் சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம்’’ என்றார்.

.

மூலக்கதை