ஆட்டநாயகன் விருதை மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன்: மும்பை கேப்டன் பொலார்ட் மகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆட்டநாயகன் விருதை மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன்: மும்பை கேப்டன் பொலார்ட் மகிழ்ச்சி

மும்பை:  ‘இன்று (நேற்று) எனது மனைவிக்கு பிறந்தநாள். இந்த ஆட்டநாயகன் விருதை அவருக்கு நான் சமர்ப்பிக்கிறேன்’ என்று மும்பை இண்டியன்ஸ் அணி கேப்டன் கிரன் பொலார்ட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்று நடந்த போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. காயம் காரணமாக இப்போட்டியில் ரோஹித் ஷர்மா ஆடவில்லை.

அவருக்கு பதிலாக கிரன் பொலார்ட் கேப்டனாக செயல்பட்டார். முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது.

கே. எல். ராகுல் 64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள்(6 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். கிறிஸ் கெய்ல் 36 பந்துகளில் 63 ரன்கள்(3 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார்.

மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட் வீழ்த்தினார்.

198 ரன்கள் என்ற இலக்கை பரபரப்பான கடைசி ஓவரின் கடைசி பந்தில் எட்டி, 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி, இப்போட்டியில் வென்றது. கிரன் பொலார்ட் 31 பந்துகளில் 83 ரன்களை(3 பவுண்டரி, 10 சிக்சர்) எடுத்து, அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியின் வெற்றிக்கு காரணமானார்.

வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில் ராஜ்புட் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தை அவர் நோபாலாக வீச, அதில் பொலார்ட் சிக்சர் அடித்தார்.

அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து, அவுட் ஆனார்.

அல்ஜாரி ஜோசப்பும்(15 ரன்கள்), ராகுல் சாஹரும்(1 ரன்) நின்று அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். இப்போட்டியின் ஆட்டநாயகன் பொலார்ட் கூறுகையில், ‘‘கேப்டனாக பொறுப்பேற்று சிறப்பாக விளையாட உதவிய கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

எனது மனைவிக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

இன்று அவருக்கு பிறந்தநாள்.

எனது ஆட்டநாயகன் விருதை அவருக்கு சமர்ப்பிக்கிறேன். வான்கடே மைதானம் எனக்கு விருப்பமான மைதானம்.

இன்று பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மைதானம் இருந்தது’’ என்று தெரிவித்தார். ஹர்திக் பாண்டியா கூறுகையில், ‘‘பொலார்ட் சிறந்த பேட்ஸ்மேன்.

இந்த வெற்றி அவரால் மட்டுமே சாத்தியமானது’’ என்று தெரிவித்தார். பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறுகையில், ‘‘நல்ல இலக்கை நிர்ணயித்தோம்.

இந்த மைதானத்தில் 198 ரன்களை துரத்தி எடுப்பது கடினம். நாங்கள் பந்துவீசும் போது ஈரப்பதம் அதிகமாக இருந்தது.

அதனால் எங்கள் பவுலர்கள் யார்க்கர்கள் வீச முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் கடைசி ஓவர்களில் பொலார்ட் மிகச் சிறப்பாக ஆடினார்.

அவரது அதிரடி ஆட்டத்தால் எங்களது வெற்றி பறி போனது’’ என்று தெரிவித்தார்.

.

மூலக்கதை