டென்னிஸ் உலகில் ரோஜர் பெடரர் புதிய சாதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
டென்னிஸ் உலகில் ரோஜர் பெடரர் புதிய சாதனை

லாஸ் ஏஞ்சல்ஸ்:  சர்வதேச ஆடவர் ஒற்றையர் டென்னிசில் பல சாதனைகளை கைவசம் வைத்துள்ள ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தற்போது மேலும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். ஏடிபி ஆடவர் ஒற்றையர் தர வரிசையில் முதல் 100 இடங்களில் ரோஜர் பெடரர் தொடர்ந்து 1020 வாரங்களாக நீடித்து, தற்போது புதிய வரலாறு படைத்துள்ளார்.

முன்னதாக இந்த சாதனை அமெரிக்காவின் முன்னாள் நம்பர் ஒன் ஆண்ட்ரே அகாசியிடம் (1019 வாரங்கள்) இருந்தது. அவரது இந்த சாதனை இந்த வாரம் 37வது வயதில் பெடரரால் முறிடிக்கப்பட்டுள்ளது.

ஆடவர் ஒற்றையரில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 30 கிராண்ட்ஸ்லாம் பைனல்களில் ஆடியது,

ஒற்றையர் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் 310 வாரங்கள் நீடித்து இருந்தது என பல்வேறு சாதனைகள் பெடரர் வசம் ஏற்கனவே உள்ளன. இந்நிலையில் அந்தப் பட்டியலில் தற்போது மேலும் ஒன்று அதிகரித்துள்ளது.

முதல் 100 வீரர்களுக்கான பட்டியலில் கடந்த 1999ம் ஆண்டு முதன் முதலாக இடம் பெற்ற பெடரர், 1020 வாரங்களில் 1018 வாரங்கள் தொடர்ந்து அந்தப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது 19வது வயதில் கடந்த 2001ம் ஆண்டு ஏடிபி தரவரிசையில் முதன் முதலாக 20 இடங்களுக்குள் முன்னேறினார்.

அடுத்த ஆண்டே (2002) மே மாதத்தில் ஹாம்பர்க் பட்டத்தை வென்றதன் மூலம் முதன் முதலாக டாப் 10-ல் இடம் பிடித்தார்.

2003ம் ஆண்டு முதன் முதலாக அவர் விம்பிள்டன் பட்டம் வென்ற போதும், வென்ற பிறகும் கூட தரவரிசையில் அவர் முதலிடத்தை பிடிக்கவில்லை.

2004ம் ஆண்டு ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாமில் அவர் ஒற்றையர் பட்டம் வென்ற போதுதான், அவரால் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க முடிந்தது.

கடந்த மாதம் மியாமி ஓபனில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றதன் மூலம், தற்போதைய ஏடிபி தரவரிசையில் பெடரர் 4ம் இடத்தில் உள்ளார்.

.

மூலக்கதை