17-வது மக்களவை தேர்தல்: முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

PARIS TAMIL  PARIS TAMIL
17வது மக்களவை தேர்தல்: முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11–ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19–ந் தேதி வரை ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று (வியாழக்கிழமை)  துவங்கி நடைபெற்று வருகிறது. 
 
ஆந்திராவில் 25, அருணாசலபிரதேசத்தில் 2, அசாமில் 5, பீகாரில் 4, சத்தீஷ்காரில் 1, காஷ்மீரில் 2, மராட்டியத்தில் 7, மணிப்பூரில் 1, மேகாலயாவில் 2, மிசோரமில் 1, நாகலாந்தில் 1, ஒடிசாவில் 4, சிக்கிமில் 1, தெலுங்கானாவில் 17, திரிபுராவில் 1, உத்தரபிரதேசத்தில் 8, உத்தரகாண்டில் 5, மேற்கு வங்காளத்தில் 2, லட்சத்தீவுகளில் 1, அந்தமான் நிகோபார் தீவுகளில் 1 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.
 
91 நாடாளுமன்ற தொகுதிகளிலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா சட்டசபை தேர்தலிலும் நேற்று முன்தினம் மாலை அனல் பறக்கும் பிரசாரம் முடிந்தது. இன்று (வியாழக்கிழமை) ஓட்டுப்பதிவு நடப்பதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேசம், காஷ்மீர், மேற்கு வங்காளம், அந்தமான், லட்சத்தீவுகளில் காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள  ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. 
 
ஆந்திராவில் அரக்கு நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய  வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. அரக்கு நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில் சில இடங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரையில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு ஒரு சில இடங்களில் மட்டும் மாலை 4 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்து விடும்.
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரையிலும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஒடிசா, பீகார், சத்தீஷ்கார், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் ஓட்டுப்பதிவு 7 மணிக்கு தொடங்கியுள்ள போதிலும், முடிவது மாலை 3 மணி முதல் 5 மணி வரை இடத்துக்கு தக்கவாறு அமைகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலங்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வட கிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசல பிரதேசம், மிசோரம், சிக்கிம், திரிபுரா, மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா ஆகியவற்றில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரையில் வாக்குப்பதிவு இடைவெளியின்றி தொடர்ந்து நடக்கிறது.

 

மூலக்கதை