இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தி.மு.க. அரசுதான் - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

PARIS TAMIL  PARIS TAMIL
இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தி.மு.க. அரசுதான்  எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் எம்.தியாகராஜனை ஆதரித்து குன்னூர், ஊட்டி, கோத்தகிரி, மேட்டுப் பாளையம் பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குன்னூரில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

பச்சைப்பொய்

கோடநாடு விவகாரத்தில் எனக்கு தொடர்பு உள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுவது பச்சைப்பொய். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷயான் மற்றும் மனோஜ் இருவரும் ஒரு ஓட்டலில் பேசிக்கொண்டிருக்கின்றனர், ஸ்டாலின் சொல்லிக் கொடுத்ததை எப்படி நிறைவேற்றலாம் என்பதையும், முதல்- அமைச்சரை எப்படி இதில் இணைக்கலாம் என்றும் பேசிய வீடியோ ஊடகங்களில் வெளியானது.

முதல்-அமைச்சர் மீதே பொய்யான வழக்கை ஜோடிக்க பார்க்கிறார் என்றால் நாளை நாட்டு மக்கள் மீது எப்படி பொய் வழக்குகள் போடுவார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

அரசு விசாரிக்கும்

கருணாநிதி முன்னாள் முதல்-அமைச்சர், எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். உடல்நல குறைவு ஏற்பட்டு அவருக்கு பேச முடியாத நிலை ஏற்பட்டது. ஏன் பேச முடியவில்லை? அவர் தலைவராக இருந்தால் மு.க.ஸ்டாலின், தான் தலைவராக முடியாது என்று எண்ணி அவருக்கு சிகிச்சை அளிக்காமல் 2 வருடம் வீட்டிலேயே வைத்திருந்தார். வெளிநாட்டில் உயர்தர சிகிச்சை அளித்திருந்தால் அவர் நன்றாக பேசியிருப்பார் என்று தி.மு.க.வினர் கூறுகின்றனர். திட்டமிட்டு மு.க.ஸ்டாலின் தனது சுயநலத்திற்காக தன்னுடைய தந்தையையே சிறை வைத்த தலைவர்.

மு.க.ஸ்டாலின் அவரை சிறை வைத்தபோது தன்னை தி.மு.க. தலைவராக அறிவியுங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் கருணாநிதி அறிவிக்கவில்லை, ஏன் என்றால், எனக்கே இப்படிப்பட்ட கொடுமை நடக்கிறது, என்னை நம்பியிருக்கிற தொண்டர்களின் நிலை என்னவாவது என்று நினைத்து செயல் தலைவராகத்தான் ஆக்கினார்.

அவர் இறந்த பிறகுதான் அவசர, அவசரமாக மு.க.ஸ்டாலின் தலைவர் ஆனார். இது அனைத்தையும் தி.மு.க. கட்சியினர் தான் கூறினார்கள். அவர் நன்றாக இருந்தால் தி.மு.க. தலைவராக முடியாது என்று சித்ரவதை செய்துள்ளார்கள். இது குறித்தும் இந்த அரசு விசாரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஊட்டியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

ஊழல் வழக்கில் சிறை

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஸ்பெக்ட்ரம் ஆ.ராசா போட்டியிடுகிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசாவும், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழியும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ், தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் இப்போது சி.பி.ஐ. மேல்முறையீடு செய்ய உள்ளது. ஊழல் வழக்கில் சிறை சென்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார்.

அ.தி.மு.க அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் சுமத்துகிறார். ஊழல் வழக்கில் சிறை சென்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த என்ன தகுதி இருக்கிறது?. தி.மு.க.வினர் மத்தியிலும், மாநிலத்திலும் பதவியில் இருந்தபோது மக்களுக்கு நன்மை செய்யவில்லை. குடும்பத்தினர் வளம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டனர். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தி.மு.க. அரசுதான்.

மின் உற்பத்தி

2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பதவி வகித்த தி.மு.க. ஆட்சியில் மின்தட்டுப்பாடு இருந்தது. இதனால் தொழில்கள் பாதிக்கப்பட்டன. அ.தி.மு.க. அரசின் தீவிர முயற்சியால் மின்சார உற்பத்தி அதிகரித்தது. தி.மு.க. ஆட்சியில் 9 ஆயிரம் மெகாவாட் மின்தேவை இருந்தபோது பற்றாக்குறை ஏற்பட்டது. இப்போது 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் மின்மிகை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைப்பாகையும், படுகர் இன மக்கள் அணியும் போர்வையும் ஊட்டியில் அணிவிக்கப்பட்டது. பின்னர் கோத்தகிரி எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

மூலக்கதை