பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மனைவி கௌரவம்மாள் காலமானார்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மனைவி கௌரவம்மாள் காலமானார்!

பாட்டுக்கோட்டையில் வெற்றிக்கொடி நாட்டியவர் பட்டுக்கோட்டையார் என அன்புடன் அழைக்கப்பட்டவர்,'மக்கள் கவிஞர்' பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இவரது மனைவி கெளரவம்மாள் தனது  80-வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.

இரத்தினபுரி இளவரசி படத்தின் மூலம் 1959-ல் ஆடுமயிலே எனும் பாடலை எழுதி திரையுலகில் அறிமுகமானவர்  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

கொக்கரக் கொக்கரக்கோ சேவலே, என்னருமை காதலிக்கு வெண்ணிலவே, சின்னப்பயலே... சின்னப்பயலே சேதி கேளடா, தூங்காதே தம்பி தூங்காதே, திருடாதே பாப்பா திருடாதே, உன்னைக் கண்டு நானாட போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் படைத்து மக்களின் நெஞ்சக் கோட்டையில் இடம் பிடித்தவர் பட்டுக்கோட்டையார்.

தத்துவம் நிறைந்த பாடல்களைத் தந்ததால், மக்கள் கவிஞர் எனப் போற்றப்பட்டவர்  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். பலமான சமூக சீர்திருத்த கருத்துக்களை கூட எளிய தமிழில் தனது பாட்டால் உணர்த்தியவர்.

திரையுலக வரலாற்றில், பத்தாண்டு காலத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாட்டெழுதியவர். சிந்தனைத் தெளிவும், கருத்துச் செறிவும் நிறைந்த பாடல்கள் என்பதால், அவை அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

விவசாயி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, அரசியல்வாதி, கவிஞர் என 17 விதமான பணிகளைச் செய்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். 

இவரது மனைவி கெளரவம்மாள். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இவரைத் திருமணம் செய்து வெறும் 5 மாதங்கள்தான் ஆகி இருக்கும்.. தன்னுடைய 29 வயதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உயிரிழந்தார். அவர் இறக்கும் போது கௌரவம்மாள் கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் கூடுதல் இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற க. குமாரவேலு என்ற மகன் உள்ளார். 

பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில்தான் கௌரவம்மாள் இவ்வளவு காலமாக  வாழ்ந்து வந்தார். 

80 வயதான இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக கடந்த 6 மாதங்களாக வீட்டிலேயே  சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரிலேயே தகனம் செய்யப்பட்டது.

காலத்தால் அழியாத பாடல்கள் தந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் மனைவி கௌரவம்மாள் மறைவிற்கு வலைத்தமிழ் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

மூலக்கதை