ஐபிஎல் டி20 தொடரில் இன்று.... சென்னை-மும்பை அணிகள் பலப்பரிட்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐபிஎல் டி20 தொடரில் இன்று.... சென்னைமும்பை அணிகள் பலப்பரிட்சை

மும்பை:  ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று மும்பையில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இத்தொடரில் இதுவரை ஆடியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இத்தொடரின் துவக்க ஆட்டத்தில் சென்னை அணி, கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது வெற்றி கணக்கை துவக்கியது. தொடர்ந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் சென்னை அணி முதலிடத்தை பிடித்துள்ளது.இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள மும்பை இண்டியன்ஸ் அணி, அவற்றில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்திலும், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் மும்பை அணி தோல்வியடைந்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றுள்ளது. 2 அணிகளும் 3 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளன.

ஐபிஎல்லில் இதுவரை 2 அணிகளும் 26 போட்டிகளில் ஆடியுள்ளன. இதில் மும்பை இண்டியன்ஸ் 14 போட்டிகளிலும், சென்னை அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.கடந்த ஆண்டு ஐபிஎல்லில் இரு அணிகளும் 2 போட்டிகளில் மோதியுள்ளன. தலா ஒரு போட்டியில் இரு அணிகளுமே வெற்றி பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை சென்னை கைப்பற்றியது. மும்பை அணி 5வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

மிடில் ஆர்டர் பேட்டிங்கை வலுப்படுத்த இன்றைய போட்டிக்கான மும்பை அணியில் கிரன் போலார்டுக்கு பதிலாக பென் கட்டிங் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணியில் மாற்றம் ஏதும் இருக்காது என்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடந்த போட்டியில் ஆடிய அதே 11 வீரர்கள் இதிலும் ஆடுவார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

.

மூலக்கதை