ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டில் 25 சதவீதம் அதிகரிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டில் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. 

இந்தியாவில் உள்ள சில மாணவர்கள், வெளிநாடு சென்று கல்வி பயில வேண்டும் என பல்வேறு நாடுகளுக்கு சென்று  கல்வி பயின்று வருகின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ் நாடுகளில் படிக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர்.

குறிப்பாக, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்காக அதிக மாணவர்கள் வெளிநாடு  செல்கின்றனர். இந்த நிலையில், ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். 

இது ஆஸ்திரேலியாவில் சேர்க்கை பெற்ற மொத்த சர்வதேச  மாணவர்களின் எண்ணிக்கையில் 12 புள்ளி 4 சதவீதமாகும் என்றும் 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24 புள்ளி 5 சதவீதமும் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கடந்த மாதம் 20-ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி ஆஸ்திரேலியாவின் ஊரகப் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயின்ற, சர்வதேச பட்டதாரிகள்  அந்நாட்டில் பணியாற்றும் தற்காலிக விசாவிற்கான அவகாசம் கூடுதலாக ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

பெரும்பாலான சர்வதேச மாணவர்கள் சிட்னி, மெல்பர்ன், பெர்த், பிரிஸ்பேன் மற்றும் கோல்ட் கோஸ்ட் ஆகிய முக்கிய  நகரங்களை அதிக அளவு ஆக்கிரமிப்பதைக் குறைக்கும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம், ஏற்கெனவே சர்வதேச பட்டதாரிகள் 2 ஆண்டுகளுக்கு பணியாற்ற அனுமதிக்கும் தற்காலிக விசாவை கூடுதலாக ஒரு ஆண்டு  நீட்டிக்கும்போது, அங்கு குடியேறத் தேவையான போதிய பணி அனுபவம் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது

மூலக்கதை