ஐபிஎல் டி20 தொடரில் இன்று... பெங்களூரு-ராஜஸ்தான் அணிகள் மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐபிஎல் டி20 தொடரில் இன்று... பெங்களூருராஜஸ்தான் அணிகள் மோதல்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் இரு அணிகளும் இதுவரை தலா 3 போட்டிகளில் ஆடியுள்ளன.

இரு அணிகளும் தலா 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி, நேற்று முன்தினம் சன் ரைசர்ஸ் அணியிடம் 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதே நாளில் சென்னை சூப்பர் கிங்சிடம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடர் தோல்விகள் காரணமாக இரு அணிகளிலுமே மாற்றம் இருக்கலாம்.

குறிப்பாக பெங்களூரு அணியில் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், பவுலர் டிம் செளத்தி ஆகியோர் இன்றைய போட்டிக்கான ஆடும் 11 வீரர்கள் கொண்ட அணியில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், ‘‘ஜெய்ப்பூர் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வெற்றிக்கு தேவையான திட்டமிடலுடன் இறங்குவோம்.

இந்த போட்டி எங்களுக்கான போட்டியாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன் ஆகியோர் பேட்டிங்கில் நிலைத்து நிற்கின்றனர்.

இருப்பினும் அந்த அணியின் பந்து வீச்சு கவலைக்கிடமாக காட்சியளிக்கிறது. கிருஷ்ணப்பா கௌதம், ஜெயதேவ் உனட்கட் மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோரது பந்துவீச்சு, இந்த தொடரில் இதுவரை எடுபடவில்ைல.

ராஜஸ்தான் கேப்டன் அஜிங்க்யா ரஹானே கூறுகையில், ‘‘கடந்த 3 போட்டிகளிலும் நாங்கள் நன்றாகவே ஆடினோம்.

ஆனால் அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை. சிறிய விஷயங்களில் அசட்டையாக இருந்து வெற்றியை இழந்து விட்டோம் என்று நினைக்கிறேன்.

இனிமேல் கவனமாக விளையாடுவோம்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது எங்களுக்கு மிகவும் முக்கியம்’’ என்று தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை